Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Tuesday, February 5, 2013

யாரும் படிக்கக்கூடாத டைரி பக்கங்கள்..



டிசம்பர் 10, 2009
    இதோ நேற்றோடு அனைத்தும் அவரிடம் பேசி முடித்தாயிற்று.  அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஏற்பட்ட பந்தத்தை நீதிமன்ற வாசற்படி ஏறாமல் வீட்டினுள்ளேயே முறித்து இருவரின் மனதிற்குள் பூட்டு போட்டாயிற்று.  அதுவும் என் ஒரே இனிய மகளுக்காக.  இருவரும் உடைந்து போன முகம் பார்த்த கண்ணாடியை திரும்ப ஒட்ட வைக்க எல்லாம் முயற்சிக்கவில்லை.  உன் கண்ணாடியில் நீ ,என் கண்ணாடியில் நான் என திசைமாறிய பறவைகளாகிவிட்டோம், ஒரே கூட்டினுள்.  இது சாத்தியப்படுமா என்ற கேள்வி மனதை பிழந்தெடுத்தது.  ஆனாலும், வேறு வழியில்லை.  இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலை.  இன்று புதிதாக உன்னை வாங்கி வந்துவிட்டேன்.  முன்பெல்லாம் தனிமை இரவில் அவரின் மார்பில் முகம் புதைத்து நான் பேசிய பேச்செல்லாம் இனி யாரிடம் பகிர்ந்து கொள்வது என்ற நிஜம் சுட...... நீ எனக்கு சொந்தமாகிப் போனாய்.

டிசம்பர் 12, 2009
    நல்லவேளை, வீட்டில் மூன்று அறைகள் இருந்தது வசதியாகிப் போனது.  அஞ்சலி படிப்பதற்கு ஒரு அறை போய்விட நானும் அவரும் ஆளுக்கு ஒரு அறையை எடுத்துக் கொண்டோம்.  ‘ஸ்டோர் ரூமை எதுக்கும்மா சுத்தம் பண்றீங்க, ஐ புது பெட், இனி இதுதான் நம்ம பெட் ரூமா’ என அஞ்சலி அடுக்கிக் கொண்டே போன வார்த்தை கலவைக்கெல்லாம் அம்மாவின் வேலை பொருட்டு இரவு நெடுநேரம் கண்விழித்து இருப்பதால் அப்பாவின் தூக்கம் கெடுவதாக அவளிடம் பொய்யையும் உரைத்தாயிற்று.

ஜனவரி 1
    ஒரே வீட்டில் முன்பு கணவன் மனைவியாக இருந்ததைவிட நல்ல நண்பர்களாக இருப்பது அவ்வளவு சிரமமாக இல்லை.  ஜஸ்ட் இன்ட்ரஸ்டிங். இரவு நேர சண்டைகளுக்கு விடிவு கிடைத்ததில் என்னைவிட அருணுக்குத்தான் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்.  இரவு பத்துக்கெல்லாம் அவர் குறட்டை விடும் சத்தம் என் அறையை சுத்தி வட்டமிடுகிறது.  அஞ்சலியிடம் எங்கள் பிரிவை மறைப்பதில் தான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.  பத்து வயதில்லையா, துறுதுறுவென எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.

ஜனவரி 28
    அருண் என்னிடம் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ அதன்படியே நடந்துக் கொள்கிறார்.  நான் கூட ஒரே வீட்டில் இரு துருவங்களாக வாழ்வது சாத்தியமா என நினைத்தேன்.  ஆனால் என்னிடம் அளவுக்கு அதிகமாக ஒரு வார்த்தைக்கூட எக்ஸ்ட்ராவாக பேசுவது இல்லை.  முன்பு வார்த்தை அம்புகள் கிழித்ததை விட சமயத்தில் மௌன அம்புகள் அதிகமாய் புண்படுத்துகிறது.

    குடும்ப செலவுகளை பாதியாக பகிர்ந்து கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது தானே.  அதன்படி வரவு-செலவுகளை எழுதி என் பங்கை இன்று அவரிடம் நீட்டினேன்.  வைத்துக் கொள் என்பதாக சைகை மட்டுமே அவரிடம்.  வேண்டாம் என வம்படியாக மேஜை மேல் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

பிப்ரவரி 14
    இந்த தினத்தின் முன்பொரு பனி இரவில் நாங்கள் முதன் முதலில் சொல்லிக் கொண்ட ‘ஐ லவ் யூ’ நினைவுக்குள் வந்து முடிச்சு போட்டு போட்டு அவிழ்த்தது.  இரவு நேரத்தில் தூக்கம் வராமல் புரள்வதால் நாளை முதல் வேலையாக ஒரு டி.வி.யை வாங்கி என் ரூமிற்குள் வைத்துவிட வேண்டும்.


மார்ச் 2
    அதெல்லாம் கலந்துக்க முடியாது என்று சொன்னதுதான் அஞ்சலிக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்துவிட்டது.  அஞ்சலியின் பள்ளியில் நடைபெற இருக்கும் சிறந்த அம்மா - அப்பா மற்றும் அவர்களின் ஜோடிப் பொருத்தம் கான்டஸ்ட் தான் அவள் இறக்கிய இடி.  எப்படி அவளை தேற்றுவது எனப் புரியாமல் இருவரும் கல்லாகிப் போனோம்.  இறுதியில் அவர் தான் என்ன சொல்கிறாய் என்பதாய் என்னைப் பார்த்தார். சம்மதத்தை தவிர வேறு என்ன செய்வது?

    ஒன்றாக இருந்தபோதெல்லாம் இதுபோல் எதுவும் இல்லை.  தாமரை இலை தண்ணீர் போல் இருக்கையில் தான் குளத்தினுள் எதிர்நீச்சல்.


மார்ச் 15
    என்ன மம்மி டாடி, ரெண்டு பேரும் ஆளுக்கொரு வேலையையே எப்பவும் செஞ்சிட்டிருக்கீங்க.  இன்னும் 10 நாள்தான் இருக்கு.  எப்படி பிரிப்பேர்  பண்ணப் போறீங்க…  எனக்குத் தெயாது நீங்கதான் ஃப்ர்ஸ்ட் ஜோடியா வரணும்.  நான் என் பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் பெட் கட்டியிருக்கேன்.  நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்த முதல் படத்துல இருந்து பிடித்த விஷயங்கள் வரை  நோட் பண்ணிக்கோங்க.  மறந்துடப் போறீங்க.  இன்னும் 10 நாள்தான். 25ம் தேதி கான்டஸ்ட்.  அப்புறம் ரெண்டு பேரும் ஆபீஸ்க்கு அன்னிக்கு லீவ் சொல்லிடுங்க.  இப்படியாக சொல்லிக்கொண்டே போன அஞ்சலியை நாங்கள் முகத்தில் ஈயாடாமல் தான் வெறித்தோம்.


மார்ச் 20
    5 நாட்கள் கழிந்துவிட்டது.  அருண் போட்டி பற்றி எதுவும் என்னிடம் பேசவேயில்லை.  நான் ஏன் முதலில் பேச வேண்டும்  என்ற ஈகோ என்னையும் அழுத்திவிட்டது.  அஞ்சலியை நினைத்தால்தான் பரிதாபமாக இருந்தது.  எங்களின் முகங்களையே மாறி மாறி பார்த்த வண்ணம் இருக்கிறாள்.  வித்தியாசத்தை அவளும் உணர்ந்திருக்கிறாள் போலும்.  விரைவில் அவளும் இதில் பழக்கப்பட்டுவிடக்கூடும்.


மார்ச் 22
    சுஜி என இன்று காலை மிகவும் சத்தம் போட்டு என்னை அழைத்தார்.  உடம்பினுள் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் எரிந்தது போல் என்னுள் பிரகாசம்.  என் பெயரை சொல்லி அழைத்து எத்தனை நாட்களாயிற்று.  இனம் புரியாத சந்தோஷம் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது.  என்னவென்று கேட்டு அவரின் அறையை அடைந்தேன்.  முக்கியமான ஆபீஸ் பைல் ஒன்று காணவில்லை என்றும் நான் எங்கேனும் அதை பார்த்தேனா என்பதே அவர் அழைத்ததற்கான காரணமாக இருந்தது.  நான்கு மாதங்கள் கழித்து அவர் எனக்கு பணித்த முதல் வேலை.  தேடினேன் தேடினேன்…  தேடிக்கொண்டே இருந்தேன்.  அலமாரிகளில் காக்கிரி போக்கிரி என நொந்தப்பட்டிருந்த அவரின் துணிகளை தொடுகையில் என் கைகளில் மெல்லிய நடுக்கம்.  அவர் வெளியே ஹாலில் தேடிக்கொண்டிருக்க அஞ்சலிக்கு ஸ்கூலுக்கு நேரமாகவே அவளை தயார்படுத்தி அனுப்பிவிட்டு மறுபடி வேட்டையை தொடர்ந்தேன்.  மற்றொரு ரேக்கை இழுக்க நானும் அவரும் தோள் மேல் கை போட்டபடி முன்பொருமுறை தஞ்சாவூர் மாமா எடுத்த அந்த ஸ்டில் இருந்தது.  அதை பெரிதுபடுத்தி புது பிரேம் போட்டு பார்க்கவே அழகாக இருந்தது.  அதனடியில் அஞ்சலி பிறக்கையில் நான் தாய் வீட்டிலிருந்த அந்த 7 மாதங்களும் இவருக்கு நான் எழுதிய கடிதங்கள் கொத்தாக காணக் கிடைத்தது.  ஆங்…  கிடைச்சிடுச்சி என அவர் வெளியிலிருந்து சத்தம் கொடுக்க நான் பாதி மனதுடன் கடிதங்களை அப்படியே வைத்துவிட்டு வெளியேறிவிட்டேன்.

    இத்தனை நாள் எங்கே பத்திரப்படுத்தி வைத்திருந்தார் என்றே தெரியவில்லை.  இதோ உன்னில் எழுத முடியாமல் கண்களை கண்ணீர் மறைக்கிறது.


மார்ச் 23
    இரண்டு நாட்கள்தான் மீதம் பள்ளிப் போட்டிக்கு.  அஞ்சலி உறங்கிய பின் நாம் முதன்முதலில் பார்த்த படம் ஞாபகம் இருக்கிறதா என நான் தான் ஆரம்பித்தேன்.  ம்… ஏன் இல்லாமல் என்பதாய் ஆரம்பித்த அரைமணி நேர பேச்சும் இனிமையாய் கழிந்தது.  முதல் விருந்து, முதல் அவுட்டிங், பிறந்த தேதி, பிடித்த விஷயங்கள், பிடிக்காத தருணங்கள், விட்டுக் கொடுத்த நிமிடங்கள், சண்டை போட்ட கணங்கள் என மன பரிமாற்றத்தில் அரைமணியும் அருமையாகக் கழிந்தது.


மார்ச் 25
    பள்ளியில் எங்கள் இருவரிடமும் நிறைய கேள்விகளை கேட்டு பதில்களை வாங்கிக் கொண்டே இருந்தனர்.  கேள்விகளின்போது உதட்டளவில் பூத்த சிரிப்பை அவர் மறைத்துக் கொண்டார்.  என்னால் தான் கட்டுப்படுத்த இயலவில்லை.  பல இடங்களில் விழுந்து விழுந்து சிரித்தேன்.  அருண் அதை ரசிப்பதாக கண்கள் சொல்ல வெட்கம் என்னில் ஒட்டிக்கொண்டது.  பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்த நெருக்கம், யதேச்சையான ஸ்பரிசம் மனதில் ஆழ்ந்த கிளர்ச்சியை உண்டு செய்துவிட்டது.  ஒருநிலை படுத்த இயலாமல் தவித்தேன்.

    இதோ முடிவு அறிவித்தார்கள்.  எங்களை சிறந்த தம்பதியாக தேர்வு செய்திருந்தனர்.  மகிழ்ச்சியில் உரத்த கத்த வேண்டும் போல் இருந்தது.  ஆனாலும் இதயத்தின் ஓரத்தில் வலி.  எங்கே உடைந்து விடுவேனோ என்ற பயத்தில் அருணின் கண்களை பார்க்க முடியாமல் தவிர்த்தேன்.  அஞ்சலிக்கு ஒரே உற்சாக துள்ளல் தான் இன்றெல்லாம்.

    வீடு திரும்புகையில் அஞ்சலி டிரீட் கேட்கவே ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.  அஞ்சலி மெனு கார்டை ஆய்ந்து கொண்டிருக்க மஷ்ரூம் 65யும் ஆனியன் ஊத்தாப்பத்தையும் அருணே ஆர்டா; கொடுத்தார்.  டாடி, நான்தான் பார்த்துட்டிருக்கேன்ல, அதுக்குள்ள ஏன் ஆர்டர் கொடுத்தீங்க என அவள் இழுக்கையில் உங்கம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் என்றார்.  மயிலிறகில் மனதை வருடும் சுகம் வசப்பட்டது எனக்கு.


ஏப்ரல் 20
    காலண்டரை கிழிக்கையில் தென்பட்ட அந்த நாளையே இன்று 5 நிமிடமாக வெறித்திருந்தேன்.  சென்ற வருடம் இந்நாளில் பக்கத்து வீட்டு மாமியிடம் ஆசி வாங்கியது, பட்டுப் புடவை சரசரக்க கோவிலுக்கு போனது கண்முன் வந்துபோனது.  ஆம், திருமண நாள்.  ஆபீஸில் மாலினி எனக்கு எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு புத்தகத்தை பரிசளித்தாள்.  மேய்ந்ததில் அவர் கண்ட ஒரு வடமாநில குடும்பத்தில் வாரம் ஒருநாள் குறை சீட்டு வைபவம் போல் ஒன்றை தொடர்ந்து செய்வதாகவும் அதில் ஒருவருக்கு ஒருவர் மேல் ஏற்பட்ட குறையை அந்த சீட்டில் எழுதி குடும்பத்தினரின் முன்னிலையில் பரிமாற்றம் குறித்தும் எளிதான தீர்வு குறித்தும் எழுதியிருந்தார்.  எனக்கு ஏன் அவ்வாறு தோணவில்லை என்பதை எண்ணி மருகினேன்.  பல சமயம் ஒப்புக்கும் வீம்புக்கும் நான் போட்ட சண்டைகள் தேனீக்களாக வந்து மனதை கொத்தின.  ஈகோ என்னும் மாயப்பிசாசின் தூண்டிலில் மாட்டிக் கொண்ட மீனாகிப் போன தருணங்களை எண்ணி என்ன செய்ய?


ஏப்ரல் 21
    நேற்றிரவு உன்னில் எழுதிவிட்டு தூக்கம் பிடிக்காமல் நான் மொட்டை மாடியில் காலாற உலவ சென்றிருந்தேன்.  ஆச்சர்யம்.  அருண் எதிர் வாடையில் பாய் தலையணை சகிதம் வானத்தை நோக்கியபடி படுத்திருந்தான்.  சிறிது நேரம் உலவிவிட்டு துக்கம் தொண்டையை அடைக்க வந்து விழுந்து விட்டேன் மெத்தையின் மேல் ஒரு மரக்கட்டையாக.


மே 10
    ஒரு வாரம் ஆபீஸ் டூர் முடிந்து வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டிருந்தேன்.  அருணும் துணிகளை பெட்டியினுள் அடுக்கிய வண்ணம் இருந்தார்.  என்னைப் பார்த்து ஏதாவது பேச மாட்டாரா என மனம் ஏங்கியது.  ஈகோயிஸத்தை விட்டுக் கொடுக்க இயலாமல் இந்த ரணத்தை நானே விரும்பி ஏற்றுக் கொண்டது தானே என மறுபுறம் நானே சமாதானப்பட்டுக் கொண்டிருக்க ‘நல்லாயிருக்கியா, எப்படி இருந்தது டிரிப்’ என விலைமதிக்க இயலா ரத்தினங்களாக வார்த்தைகள் வந்து விழுந்தது அவர் வாயிலிருந்து.  மடை திறந்த வெள்ளமாய் ஓவென அழுது விட்டேன் அவர் மார்பில் சாய்ந்தபடி.

    ‘என்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா’ பாடியபடி அலைபேசி அவரை அவசரமாய் அழைத்தது.

    பேசி முடித்தவர் பிளைட்டுக்கு நேரமாச்சு.  ஆபீஸ் டூர் போறேன் மும்பைக்கு.  வர இரண்டு நாள் ஆகும் எனச் சின்னச் சின்ன வார்த்தைகளில் சொல்லி சிட்டாக பறந்துவிட்டார்.  கடவுள் வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கா கதையாகிப் போனது.


மே 12
    அவரின் வருகையைப் பொருட்டு இந்த இரவிலும் அளவான ஒப்பனையுடன் இதோ எழுதிய வண்ணம் காத்துக் கொண்டிருக்கிறேன்.  அஞ்சலி ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாள்.  அக்னி குண்டத்தை வலம் வருகையில் ஏற்பட்ட பந்தத்திற்கு மீண்டும் உயிர்ப்பூட்டும் முனைப்பில் ‘எப்படி பேச்சை ஆரம்பிப்பது அவரிடம்’ என பலமுறை ஒத்திகை செய்து பார்த்தாயிற்று.  இதோ தெரு முனையில் அவரின் கார் எழுப்பும் ஹாரன் ஓசை. டைரியே... இனி உன் பங்களிப்பு எனக்கு அதிகம் தேவைப்படாது என நினைக்கிறேன்.

    நாளைய இரவு உன்னுடன் செலவிட எனக்கு நேரம் இருக்கப் போவதில்லை.

 நன்றி:தினமணி-கதிர் ( 3.2.2013)

Friday, February 1, 2013

காத்திருப்பு

                     

            “இப்ப வந்தவங்கள்ல யார் முதல்ல வந்த்து” அந்த
விஸ்தாரமான மருத்துவமனை ரிசப்ஷனில் நர்ஸ் வந்து கேட்டதும்
 நான் தான் சிஸ்டர் என்று சத்தமாகக் குரல் கொடுத்தபடி எழுந்து
வருவதற்குள் என் மகன் கணேஷின் பெயரைக் கொடுத்தேன்.

            சொல்லிவிட்டு பெரியவரின் முகத்தைப் பார்க்காமல்
இருக்கைக்கு வந்து கணேஷை கொஞ்சுவது போல் நடித்தேன். எதேச்சையாக பட்டது அந்தப் பெருசின் தீர்க்கமான பார்வை.  இருக்கட்டுமே, அந்த பெருசுக்கு வீட்டில் என்ன அப்படி வெட்டி முறிக்குற வேலை இருக்கப் போகிறது,  நம்ம மாதிரி ஆயிரம் வேலை காத்திருக்குமா என்ன?  குழந்தையை வெச்சிக்குனு நம்ம படுற அவஸ்தை அந்த கிழத்துக்கு இல்லையே.  எனக்கு அப்புறம் தான் போய் மருத்துவரைப் பாக்கட்டுமே.  குடியா மூழ்கிடப் போகுது.

            கிழம் என்னிடம் வாக்குவாதம் ஏதும் செய்யவில்லை.  நானும் கண்டுக்காமல் அலைபேசியை   நோண்டிக் கொண்டிருந்தேன்.  பெயர் அழைத்ததும் புயலென சீறி முழுதும் குளிரூட்டப்பட்ட மருத்துவர் அறையினுள் நுழைந்தேன்.  சிகிச்சைக்குப் பின் வெளியேறிய போது “மருத்துவர் சாப்பிடச் சொல்கிறார், பத்து நிமிடங்கள் அகும், காத்திருங்கள்” என நர்ஸ் சொன்னது காதில் தேன் ஊற்றியது போல் இருந்தது.

           அப்பா, நாம தப்பிச்சோம்.  இந்நேரம் நியாயப்படி அந்தப் பெருசு போயிருந்தா இன்னொரு அரைமணி நேரம் காத்திருந்திருப்போம்.  பொய் சொன்னாலும் இம்முறை பொருந்தச் சொன்னோம்.  என் பொய்க்கு நானே நியாயம் கற்பித்து சப்பைக்கட்டு கட்டிக் கொண்டேன்.  மனதில் அரை மணி நேரத்தை மிச்சப்படுத்திய உற்சாகக் களிப்பு.

          மூச்சு வாங்கியபடி மறுபடியும் மருத்துவமனையினுள் நுழைந்தபோது என்னை ஆட்டிப்படைத்த அந்த 20 நிமிடங்கள் கரைந்து போயிருந்தது,  தவறவிட்ட அலைபேசியை கொளுத்தும் வெயிலில் லொங்கு லொங்கென மிதிவண்டியில் தேடி அலைந்த்தில் உடலெல்லாம் எரிந்த்து.  ஊசி குத்தப்பட்ட கணேஷிற்கு தேய்த்துவிட வேண்டி மருத்துவரின் மேஜை மேல் வைத்ததாக ஞாபகம் வரவே வந்தேன்.

              அறையினுள் நுழைந்தால் மேஜையின் கீழே விழுந்திருந்த அலைபேசியின் பக்கத்தில் அந்தப் பெரியவரின் கால்கள் இருந்தது.  மருத்துவரின் அனுமதியோடு முதியோரின் கால்களை ஒத்தச் சொல்ல யத்தனிக்கையில் ஏனோ என்னிடம் வார்த்தைகள் வரவில்லை.  இப்போதும் அவரிடம் அதே தீர்க்கப் பார்வை.  என் மனதில் இருந்த குப்பையை வெளியே எடுத்து கொட்டும்படியாக இருந்தது அந்தப் பார்வை.



சதுரங்க காய்கள்


  
    கதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டு திறந்த பொன்னி தலைகீழாய் புரட்டிப் போட்டது போல் ஒரு கணம் திக்கு முக்காடித்தான் போனாள்.  மாண்டார் மீண்டார் என இதுவரை அவள் கேள்விப்படாத சங்கதியை கண்முன்னே விதி நடத்திக் காட்டும்போது அவள் கதிகலங்கியதில் ஆச்சர்யமில்லை.

    வெளியே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் சுனாமியில் காணாமல் போய் இறந்துவிட்டான் என தெரிவிக்கப்பட்ட தன் கணவன் சிதம்பரம் நின்றுக் கொண்டிருந்தான்.  கட்டுக்கதையாய் சில சங்கதிகள் புனையப்பட்டாலும் அனிச்சையாய் அவள் கண்கள் அவனின் பழுப்பேறிய வேட்டியினிடையே மறைந்திருந்த கால்களை நோட்டம் விட கீழிறங்கியது.
   
    முன்பு போல் அல்லாமல் அவன் தோற்றம் வெகுவாக மாறியிருந்தது.  தங்கமான கோதுமை நிறம் மங்கி கருத்துப் போயிருந்தான்.  நீண்டு வளர்ந்திருந்த மயிர்க்கற்றைகள் அவனின் முன்நெற்றியை மறைத்தவண்ணம் இருந்தது.  ஒரு மாதமாய் சவரம் செய்யப்படாத தாடி, மெலிந்த தேகம், குழிக்கண்கள் என எண்ணற்ற மாற்றங்கள்.  தட்டுத் தடுமாறி வார்த்தைகள் வெளிவந்தன பொன்னியிடமிருந்து

    உ ….  உள்ளாற வாங்க மாமா …

    மீன் செதில்களாய் காய்ந்து வெடித்து போயிருந்த உதடுகளை மெல்ல பிரித்தான். பொன்னி, உன்னைய திரும்ப பாப்பேன்னு சாமி சத்தியமா நினைச்சி பாக்கல புள்ள … நம்ம மவன் ராசு…

    ‘இருக்கான் மாமா, பள்ளியோடம் போயிருக்கான்’

    புழக்கடையில் மாட்டுக்கு நாலு வெக்கப்பிரியை பிரித்து போட்டிருந்த தனவேல் காலடி சத்தம் கேட்டு முன் வாசல் வர, அப்போதுதான் பொன்னிக்கு தனவேல் தன் கழுத்தில் கட்டிய இரண்டாம் தாலி நினைவுக்கு வந்தது.

    ‘பொன்னி, யாரு புள்ள அது?’  தனவேல் கேட்ட கேள்விக்கு பதில் கூற பொன்னிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

    சி… சி… சிதம்பரம் மாமா.  ராசோட அப்பா வந்துருக்காவ. நெருஞ்சி முள் சிக்கிய தொண்டையாய் மிக கஷ்டப்பட்டு வெளி வந்தன அவளின் வார்த்தைகள்.

    பேயறைந்தவன் போல் ஸ்தம்பித்து நின்றான் தனவேல்.  மூளை செயலிழந்தது போல் ஒரு வெறுமை சட்டென ஆட்கொண்டது அவனை.  தட்டுத் தடுமாறி ‘உள்ளாற வாங்க’ என்றான்.

    மெல்ல படி தாண்டி உள்நடை பக்கம் வந்தான் சிதம்பரம்.

    பக்கவாட்டில் அமைந்த சிறிய அறையில் தொங்கிய தூளியில் நீண்ட குரலெடுத்து அழ ஆரம்பித்தது குழந்தை.

    அதை மாரோடு அணைத்தவண்ணம் வெளியே எடுத்த பொன்னியின் செயலும் தனவேலின் இருப்பும் சிதம்பரம் மனதில் பொறி தட்டியது.  குழந்தையை தாங்கி நிற்கும் பொன்னியை தற்போது அவன் பார்த்த விதம், அவளால் தாங்க இயலவில்லை.

    கண்கள் தரையை தவிர்த்து பிறவற்றை பார்ப்பதாய் இல்லை.  மூவர் இடையிலும் ஓர் அமானுஷ்ய மௌனம்.  மௌனத்தை கலைக்க நல்லவேளையாய் ஊர்மக்கள் திரண்டு வாசல்வரை வந்திருந்தனர்.

    ‘ஏலே சிதம்பரம்.  இம்புட்டு நாளா எங்கவே போயிருந்த?’  கிராம பெரிசு கொக்கி போட்டார்.

    ‘எங்கிட்டோ போயி என்னென்னமோ ஆயி… சித்தங் கலங்கி சின்னா பின்னமாயி மறுபொறவி எடுத்துனு வந்திருக்கேன்’.  எம்பழைய கத எதுக்கு… எம் பொஞ்சாதி புள்ளைய பாக்கலாம்ட்டு இதோ புத்தி தெளிஞ்சி புயக்காத்தா ஓடியாந்தேன்.  ஆனா…’  அதற்கு மேல் முடியாமல் அவனின் மார்பு புடைத்துக் கொண்டு அவன் விசும்புவதாய் சாட்சி சொன்னது.

    ‘எலே சிதம்பரம், கலங்காதய்யா.  நாட்டாம்ய்யா வெளியுர் போயிருக்காவ.  சேதி சொல்லி விட்டிருக்கு.  உம்ம ஆயி அப்பனும் பக்கத்தூருலருந்து வரட்டும்.  நாள பஞ்சாயத்து கூட்டி பேசித் தீர்த்துக்கலாம்… ஏம்மா பொன்னி, இன்ன ராவு பொழுது இவன் இங்கயே தங்கட்டும்.  பள்ளியோடம் வுட்டு வந்ததும் அவன் புள்ளய கண்ணுல காமி.  நாங்கெல்லாம் வாறோம்’.

    பள்ளியோடம் விட்டு வந்த ராசு அப்பா என கூவியபடி தனவேலிடம் ஓடிப்போய் பள்ளியோட சேத்திக்காரன்களின் கதைகளை அளந்துக் கொண்டிருந்தான்.

    ‘அப்பா, யாருப்பா அவுக, நமக்கு சொந்தமா, எதுவும் பேசாம என்னயே வெச்ச கண்ணு வாங்காம பாக்குறாவ’.

    உதடுகள் பிரிய மறுத்தன மூவருக்கும்.

    தனவேல்தான் அடர்ந்த மௌனத்தை மெல்ல உடைத்தான்.

    ‘எனக்கு அண்ணன் முறைடா’.

    ‘அப்ப நான் பெரியப்பானு கூப்புடுவா?’

    எவ்வளவு நேரம்தான் பொன்னி அடக்கிக் கொண்டிருப்பாள்.  அழுகை வாய்வழியே வெடித்துச் சிதறியது.

    பொன்னியை யார் சமாதானப்படுத்துவது என தெரியாமல் இருவரும் தவித்தனர்.  மௌன யுத்தம் இருவருக்குள்ளும் அரங்கேறிக் கொண்டிருந்தது.  பொன்னி ஏன் அழுகிறாள் என ஏதும் தெரியாமல் ராசு விழித்தான்.

    மெல்லத் தன்னைத் தானே தேற்றி வந்திருந்தவனுக்கு ஒரு வா காப்பித் தண்ணியை போட்டுக் கொடுத்தாள்.

    காடு கரை திரும்பி புதிதாக சேதி அறிந்தவர்கள் ஏதோ காட்சிப் பொருளை பார்ப்பது போல் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து சிதம்பரத்தை பார்த்தவண்ணம் இருந்தனர்.  பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்ற சிதம்பரத்தின் ஆவலுக்கு முட்டுக்கட்டையாயினர் அவர்கள்.

    இருளை இதமாக போர்த்திக் கொண்டது வானம்.  இரவு உணவை இரு கணவன்களையும் பக்கவாட்டில் அமர வைத்து பர்மாற வேண்டிய நிலை.  உயிரை உயிரே பிய்த்துத் தின்னுவது போல் ஒரு குற்ற உணர்வு அவளை அரித்தது.  யாரை நினைத்து யார் அழுவது.  எந்த தெய்வத்தை துணைக்கு அழைப்பது.  ஏதும் விளங்கவில்லை அவளுக்கு.

    அந்த ஓட்டு வீட்டின் மெல்லிய விளக்கொளியில் மூவரும் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதாக ஒப்பனை செய்தவண்ணம் இருந்தார்கள்.

    அடர்ந்த மார்கழி மாத பனி வெளியே பெய்துக் கொண்டிருந்தது.  மனதெல்லாம் வெக்கையால் புழுங்கியது அவளுக்கு.  மகாபாரதத்தில் திரௌபதியின் நிலை ஒருகணம் மனதில் வந்து போனது.  அவள் இதிகாசக்காரி, ஏற்றுக் கொண்டார்கள்.  என் நிலை என்ன? ….  ஐயோ.. ஐயனாரே, நாள தீர்ப்பு என்னவாவும்.  ஆளுக்கு ஒரு பிள்ளையென பெற்றெடுத்தாயிற்று.  யாருடன் யாரை விட்டுச் செல்ல தீர்ப்பாகுமோ - நினைக்கையில் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது.  ஐயோ… இன்னமும் இந்த உசுரு உடம்போட உடும்பாட்டும் ஒட்டிக் கெடக்குதே, போய் சேர்ந்திரக் கூடாதா…

    பரிதவிச்சு வந்துருக்க மனுஷன பாக்கறதா, பட்டமரமா நிக்கையில் வாழ்க்கை தந்த மவராசன பாக்குறதா…

    பொன்னி தேர்ந்த அழகுக்காரி மட்டுமல்ல நல்ல குணவதி.  யாரையும் வாய் சொல்லில் புண்படுத்தாத மனசு.  இப்படிப்பட்டவளை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்.  இரு ஆண்களின் வயிறும் விறகின்றி எரிந்துக் கொண்டிருந்தது.  யாருக்கும் உறக்கம் பிடிபடவில்லை.

    நேற்று இரவு தனவேலுடன் இன்புற்றிருந்த இதேவேளையில் அவள் நினைத்துப் பார்க்கவில்லை இப்படிப்பட்ட அலைகழிப்பு இரவை அவள் அடையப் போகிறாள் மறுதினமே என்று.  வாழ்ந்த காலங்கள் வெறும் பாலைவனத் தடங்களாக மாறிய உணர்வு.  எந்த உறவில் உயிர்த்தன்மையை தேடுவது.  வெம்பினாள்.  வீடெங்கிலும் உணர்வுக் குவியல்களின் உஷ்ணங்கள் பரவிக் கிடந்தது.

    இவர்களின் கண்ணீர் இரவை காண சகியாமல் நிலவு வேகமாகவே மறைந்தது.

    தூங்கும் மழலையை தோள்மேல் போட்டபடி பஞ்சாயத்தின் கிழக்கு மூலையில் நின்றிருந்தாள் பொன்னி.

    பளீர் வெள்ளை வேட்டியில் நெற்றி முழுதும் இழுக்கப்பட்ட 3 விபூதி பட்டையுடன் நடுநாயமாக வீற்றிருந்தார் நாட்டாமை ஆதிகேசவன்.  அந்த விஸ்தாரமான அரச மரம் திரண்டிருந்த அத்தனை கூட்டத்திற்கும் வஞ்சனையின்றி நிழலை கொடுத்துக் கொண்டிருந்தது.

    தனவேல் பொன்னியின் அருகாமையில் நிற்க சிதம்பரம் மக்களோடு மக்களாய் கலந்திருந்தான்.

    முசுமுசுவென முணுமுணுக்க தொடங்கினர் ஊர்மக்கள்.  ‘ஐயோ பாவம்டி பொன்னி.  இதே ஒரு ஆம்பளையாயிருந்தா ரெண்டு பொண்டாட்டிய வெச்சு வாழுனு உத்தரவு போட்டுருவாக …ம்  பொட்டச்சி கதயில ரெட்ட புருஷன் ஒத்த வூட்டுல ஏத்துக்கிட மனம் வருமா.  நம்ம சமூகம்தான் வுட்டுருமா.  என்ன தீர்ப்பாவப் போவுதோ…

    ஏன்கா, ரெண்டு புருஷனும் அவ எனக்குத்தேன் வேணும்னு அடம்புடிச்சா யாரு பக்கம் நாட்டாம தீர்ப்பு சொல்வாரு.  பொன்னியுந்தான் யாரு பக்கம் நிப்பா.  அந்த புள்ளைக்கு கடவுள் இந்த சோதன செய்யக்கூடாது கா.

    இந்த தனவேல் பய ஒரு வாய் செத்தவன்.  அவனுக்குனு பரிஞ்சி பேச பொன்னியவுட்டா யாரும் இல்ல.

    ஆமாமா… சிதம்பரத்தோட ஆத்தாக்காரி ராட்சஷி.  பொன்னிய வுட்டுக்குடுக்க மாட்டா…

    சரிதான், … சிதம்பரத்துக்கு வேற ஒரு பொன்னப் பாத்து கல்யாணம் கட்டி வெக்கலாமுல்ல.

    சித்தங்கலங்கி சீரானவன கட்டிக்க எவடி ஒத்துவருவா அதுவும் இந்த காலத்துல…

    ம்… வரவேண்டியவங்கெல்லாம் வந்துட்டாவளா… சுப்பா ஆரம்பிக்கவா, கணீர் குரலில் அடியெடுத்து வைத்தார் நாட்டாமை.

    சிதம்பரத்தோட ஆயி அப்பனும் வந்துட்டாங்கய்யா.  பொன்னிக்கும் தனவேலுக்கும்தேன் யாரும் கிடையாதே.  ஆரம்பிச்சுடலாங்கய்யா.

    சிதம்பரம் 10 வருட காலம் எங்கிருந்தான் எப்படியிருந்தான் என்பதை அவன் வாயாலே கேட்டறிந்தார்.  ஊர்மக்கள் உச்சி கொட்டினர்.

    ஆழ்ந்து கேட்டவர் தீர்ப்பு சொல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார்.  நம்ம கிராமம் இதபோல ஒரு பஞ்சாயத்து சங்கதிய பாத்ததில்ல.  இது மொத தடவ.  நம்மோடது முற்போக்கு கிராமம்.  அதாலதான், இதே சிதம்பரம் காணாம போய் இறந்துட்டான்னு சொன்னப்ப, கதிகலங்கி நின்ன பொன்னிக்கு விதவைத் திருமணத்த ஆதாரிச்சு தனவேலுக்கு அவள கட்டிக் கொடுத்தோம்.

    இப்ப மனந்தளர்ந்து உயிர் ஒடுங்கி வந்திருக்க சிதம்பரத்துக்கு கண்டிப்பா ஒரு தொண தேவ.  அதால பொன்னியும் அவ மொத புள்ள ராசும் சிதம்பரத்தோட வாழ வேண்டியது.

    தனவேலு அவனுக்கு பொறந்த குழந்தய பாத்துக்க வேண்டியதுதான்.  அவன் இஷ்டப்பட்டா மறுகல்யாணம் பண்ணிக்கலாம்னு இந்த பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லுது.

    நாலாப்பக்கமும் இடிஇடித்து தன் தலைமேல் விழுந்ததாய் உணர்ந்தான் தனவேல்.

    பொல பொலவென கண்ணீர் கொட்டியது பொன்னிக்கு.  தாலியை கழற்றி மாற்றலாம்.  மனதை அவ்வப்போது மாற்றிக் கொள்ள இயலுமா?  தலை கோபுரத்தை இழந்த கோவில் போல் களை இழந்தது அவள் முகம்.  மாரோடு அணைத்து பால் கொடுக்கும் குழந்தையை மறந்துவிடுவதா.  தவித்துப் போனாள்.

    ஐயா, எனக்கு எந்த புருஷனும் வேணான்.  என் குழந்தைங்க ரெண்டு பேரையும் எங்கூடவே அனுப்பிடுங்க.  நான் தனியா வாழ்ந்துக்குறேன்.

    ஏ புள்ள, உனக்கு ரெண்டாங் கல்யாணம் முடிச்சு வெக்கச் சொல்ல மட்டும் ஒத்துக்கிட்ட.  இப்ப ஏன் பஞ்சாயத்த எதிர்த்து பேசுறவ.  அதல்லான் காணாது.  தீர்ப்ப ஏத்துக்கத்தான் வேணும்.

    ஐயா… தயவு காட்டுங்க.

    ஏ புள்ள,  இல்லாட்டி ஊர விட்டே ஒதுக்கி வச்சிடுவோம்.  ஜாக்கிரத.

    நாட்டாமகாரய்யா… தீர்ப்ப திருத்திச் சொல்லுங்க.

    சிதம்பரத்தின் உரத்த கரகரத்த குரல் கேட்டு அதிர்ந்து நின்றார் நாட்டாமை.

    எல, உனக்காண்டி தானலே பேசினேன்.

    ‘என்னய உசுருக்குசுறா பாத்துக்கிட்டவ எம் பொஞ்சாதி.  அவளுக்கு ஏற்கனவே நான் கொடுத்த கஷ்டமெல்லான் போதும்யா.  செத்தவன் செத்தவனாவே இருந்துட்டு போறேன்.  புது வாழ்க்கை வாழுறவங்கள என் வரவு கெடுக்க வேணான் சாமி.  என் புள்ளைக்கு நான்தேன் அப்பன்னு கூட தெரியல.  அவன் இங்கிட்டு நல்லாருக்கான்.  அது போதும்யா’.

    சொன்னவன் தனவேலின் கைபிடித்து தரதரவென இழுத்து வந்து பொன்னியின் கைகளுக்குள் திணித்தான்.

    புள்ள, இந்த ஊர் எல்லைய என் பொணம் கூட இனி நெருங்காது.  என்னைய பத்தி உருகாம சந்தோஷமா இருங்க… நான் வாரேன்…  இல்லல்ல போறேன்.

    ‘மாமா, எனக்காண்டி நீங்க போவாதிய’.  உலுக்கிய பொன்னியின் பேச்சு அவன் மனதுக்குள் சென்று சேர்வதற்குள்,

    கண்களில் கசிந்த ஈரத்தை மறைத்தபடி திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென நகர்ந்தான்.

    ‘எலேய்… சிதம்பரம்… என் ஐயா… என் பேச்ச கேளுய்யா.  உன் புள்ளயயாவது ஒருக்க பாத்துட்டு போய்யா’ அரம்பியபடியே அவன் பின்னால் ஓடினாள் ஆத்தாக்காரி.

    பள்ளியோடம் போய் தன் புள்ளையை ஒரு எட்டு பார்த்துவிட்டால், எங்கே தன் மனதிற்கு போட்ட இரும்பு கதவு தகர்ந்து விடுமோ என பயத்தில் அவனை பாராமலே ஊர் எல்லையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது அவன் கால்கள்.  பின் எப்போதும் அது திரும்பவேயில்லை.

 நன்றி:தினமலர்-வாரமலர்