Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Wednesday, November 28, 2012

விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

        

       சமீபத்தில் நடந்த குரூப்-2 தேர்வு எழுதினேன்.
எங்கள் அறைக்கு கண்காணிப்பாளராக வந்த ஆசிரியை
குறிப்பிட்ட நேரம் ஆகிவிட்ட பின்பும் ஒஎம்ஆர் [OMR]
ஷீட்டை கொடுக்கவேயில்லை.அனைவரும் வரட்டும்,
 வந்தவுடன் எல்லோருக்கும் ஒன்றாக விளக்கம் சொல்லி
கொடுத்து விடுகிறேன் என காலம் தாழ்த்தினார். பின்
ரவுண்ட்ஸில் வந்த மற்றொரு ஆசிரியையின் நேரம்
ஆகிவிட்ட்து,கொடுத்து விடுங்கள்என்ற அறிவுறுத்தலின்
பேரில் கொடுத்தார்.  இது கூட பரவாயில்லை. தேர்வு
முடிவடைவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் அடிக்கப்படும்
“வார்னிங் பெல்லை இறுதி மணி என நினைத்து
அனைவரின் விடைத்தாள்களையும் வாங்கிவிட்டார்.
              அறையை விட்டு பாதி பேர் கலைந்த
தருவாயில் தான் அவருக்கே தெரிய வந்தது, அது
5  நிமிடத்திற்கு முன் அடிக்கப்படும் எச்சரிக்கை மணி
என்று.  பின், எல்லோரும் உள்ளே வாருங்கள், தலைமை
ஆசிரியர் பார்த்தால் பிரச்சனை என அழைப்பு விடுத்தார்.
விடைத்தாளை திரும்ப எங்களிடம் கொடுக்கவும்
இல்லை அதற்காக ஒரு மன்னிப்பு கோரலும் இல்லை.
               5 நிமிடங்கள் என்பது இது போன்ற
அரசுத் தேர்வுகளில் எவ்வளவு முக்கியம் என்பது
அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட தேர்வுகளில்
கண்காணிப்பாளராக வரும் ஆசிரியர்கள் முதலில்
சரியான விதிமுறைகளை  தெரிந்து கொண்டு
வாருங்கள்.  சிரமப்பட்டு படித்து  வரும்
தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்.


                       




                         





Thursday, November 1, 2012

காத்திருப்பு


                      


            “இப்ப வந்தவங்கள்ல யார் முதல்ல வந்த்துஅந்த
விஸ்தாரமான மருத்துவமனை ரிசப்ஷனில் நர்ஸ் வந்து கேட்டதும்
 நான் தான் சிஸ்டர் என்று சத்தமாகக் குரல் கொடுத்தபடி எழுந்து
வருவதற்குள் என் மகன் கணேஷின் பெயரைக் கொடுத்தேன்.
            சொல்லிவிட்டு பெரியவரின் முகத்தைப் பார்க்காமல்
இருக்கைக்கு வந்து கணேஷை கொஞ்சுவது போல் நடித்தேன். எதேச்சையாக பட்டது அந்தப் பெருசின் தீர்க்கமான பார்வை.  இருக்கட்டுமே, அந்த பெருசுக்கு வீட்டில் என்ன அப்படி வெட்டி முறிக்குற வேலை இருக்கப் போகிறது,  நம்ம மாதிரி ஆயிரம் வேலை காத்திருக்குமா என்ன?  குழந்தையை வெச்சிக்குனு நம்ம படுற அவஸ்தை அந்த கிழத்துக்கு இல்லையே.  எனக்கு அப்புறம் தான் போய் மருத்துவரைப் பாக்கட்டுமே.  குடியா மூழ்கிடப் போகுது.
            கிழம் என்னிடம் வாக்குவாதம் ஏதும் செய்யவில்லை.  நானும் கண்டுக்காமல் அலைபேசியை   நோண்டிக் கொண்டிருந்தேன்.  பெயர் அழைத்ததும் புயலென சீறி முழுதும் குளிரூட்டப்பட்ட மருத்துவர் அறையினுள் நுழைந்தேன்.  சிகிச்சைக்குப் பின் வெளியேறிய போது “மருத்துவர் சாப்பிடச் சொல்கிறார், பத்து நிமிடங்கள் அகும், காத்திருங்கள்என நர்ஸ் சொன்னது காதில் தேன் ஊற்றியது போல் இருந்தது.
           அப்பா, நாம தப்பிச்சோம்.  இந்நேரம் நியாயப்படி அந்தப் பெருசு போயிருந்தா இன்னொரு அரைமணி நேரம் காத்திருந்திருப்போம்.  பொய் சொன்னாலும் இம்முறை பொருந்தச் சொன்னோம்.  என் பொய்க்கு நானே நியாயம் கற்பித்து சப்பைக்கட்டு கட்டிக் கொண்டேன்.  மனதில் அரை மணி நேரத்தை மிச்சப்படுத்திய உற்சாகக் களிப்பு.
          மூச்சு வாங்கியபடி மறுபடியும் மருத்துவமனையினுள் நுழைந்தபோது என்னை ஆட்டிப்படைத்த அந்த 20 நிமிடங்கள் கரைந்து போயிருந்தது,  தவறவிட்ட அலைபேசியை கொளுத்தும் வெயிலில் லொங்கு லொங்கென மிதிவண்டியில் தேடி அலைந்த்தில் உடலெல்லாம் எரிந்த்து.  ஊசி குத்தப்பட்ட கணேஷிற்கு தேய்த்துவிட வேண்டி மருத்துவரின் மேஜை மேல் வைத்ததாக ஞாபகம் வரவே வந்தேன்.
              அறையினுள் நுழைந்தால் மேஜையின் கீழே விழுந்திருந்த அலைபேசியின் பக்கத்தில் அந்தப் பெரியவரின் கால்கள் இருந்தது.  மருத்துவரின் அனுமதியோடு முதியோரின் கால்களை ஒத்தச் சொல்ல யத்தனிக்கையில் ஏனோ என்னிடம் வார்த்தைகள் வரவில்லை.  இப்போதும் அவரிடம் அதே தீர்க்கப் பார்வை.  என் மனதில் இருந்த குப்பையை வெளியே எடுத்து கொட்டும்படியாக இருந்தது அந்தப் பார்வை.



Sunday, September 16, 2012

ஓடிப்போனவள்



               சீறும் சிறப்புமாக மகள் ரம்யா திருமணம் நடந்து
முடிந்ததில் ஆனந்தம் தாண்டவமாடியது மீனா உள்ளத்தில்.  திருமணம் முடிந்த மூன்றாம் நாள் மாப்பிள்ளையுடன் மகள் ரம்யாவை அவர்கள் வீட்டுக்கு அனுப்பும் பரபரப்பில் மீனாவும் கணவர் பாண்டியனும் சுழன்று கொண்டிருந்தனர்.
          மதகு திறந்த அணையாய் கண்ணீர் வெள்ளம் பொங்கி
வழிய விடைபெற்றாள் புதுமணப்பெண்.  அவளுக்கு பிரியா விடை
கொடுத்து வீட்டுக்குள் வந்த மீனா, பூஜையறைக்கு ஓடி அங்கே
தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
         “என்ன மீனா, இப்படி நடந்துக்கற.  ரம்யா வீட்டிலே
இல்லாதது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.  அதுக்காக பொண்ண
பெத்துட்டு கட்டி கொடுக்காம வீட்லயே வச்சுக்க முடியுமா?
கண்ட்ரோல் யுவர்செல்ப்என்றார் பாண்டியன்.
            “இல்லங்க...ரம்யா போனதுக்காக நான் அழல...சன்னமான
குரலில் கண்களை துடைத்தபடி சொன்னாள் மீனா.
                “பின்ன?”
    “நம்ம பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தது ரொம்ப திருப்தியா மன நிறைவா இருக்கு.  ஆனா இந்த சந்தோஷத்தை என்னை பெத்தவங்களுக்கு கொடுக்க தவறிட்டத நினைச்சு பார்த்தா மனசு பூரா ஒரே குற்ற உணர்வா இருக்குங்க.  சொந்த பந்தங்க முன்னாடி அவங்களுக்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்திட்டு, ஊரை விட்டே ஓடி வந்தோம்.  அந்த வயசுல எனக்கு நீங்க மட்டும் தான் முக்கியமா தெரிஞ்சீங்க.  இப்ப பெத்தவங்க நிலைமையிலே நின்னு பார்க்கறப்பதான் எனக்கு என்னை பெத்தவங்களோட நிலைமை தெரியுது.  அதை நினைச்சு பார்க்கும் போது கண்ணீரை அடக்க முடியலீங்க,  நம்மளை மாதிரி நம்ம பொண்ணும் அவ இஷ்டத்துக்கு ஓடிப்போயி கல்யாணம் செய்திருந்தா என்ன ஆகியிருக்கும்.  ஆனா, நம்ம பொண்ணு நமக்கு நல்ல பெயர் கிடைக்க வச்சுருக்கா.  அவளைப்போல நான் இல்லாம போயிட்டேனேங்க...நெகிழ்ந்து உடைந்தாள் மீனா.
              இருவரின் பெற்றோர் படங்களும் பூஜையறையில் சிரித்துக் கொண்டிருக்க... விழி முழுவதும் திரையிட்ட நீருடன் மனைவியின் கண்ணீரை துடைத்தார் பாண்டியன்.

 நன்றி:தினமலர்-வாரமலர்

Monday, August 6, 2012

என் பெயர் வேண்டாமணி

                  

          முதன்முறையாக வேண்டாமணி என்று என் பெயரை
பரசுராமன் சார் கூப்பிட்டது தான் தாமதம் வகுப்பறையில் ‘கொல்
என்ற சிரிப்பு சத்தம். வேறு யார்?  கூடப்படிக்கும் ஆண்
வானரங்கள் இருக்கிறதே...அப்பப்பா. அதுகள் தான்.  பள்ளி,
கல்லூரி தாண்டி கல்வியியல் கல்லூரி வந்தும் கிண்டல் குறையவில்லை.
      ‘ஏம்மா, நீ எத்தனாவது பொண்ணும்மா உங்க வீட்லஆர்வமாக
கேட்டார் சார்.
       ‘ நாலாவது பொண்ணு சார்
       அடுத்து பையன் பொறந்தானா?’ பாடம் நட்த்துவதில் காட்டாத ஆர்வத்தை இதில் காட்டினார்.
        ‘ரொம்ப முக்கியம் இது வானரங்கள்.
        ;எனக்கு அடுத்து தம்பி பொறந்தான் சார். அவன் தான் கடைக்குட்டி
        ‘அடி சக்கை. அதான கேட்டேன்...வேண்டானு பேர் வெச்ச மேல நடக்குமான்னே. ம்... எனக்கெல்லாம் இந்த டெக்னிக் அப்ப தெரியாம போச்சு.என மோவாயை தடவிக் கொண்டார்.
         அது முதல் ‘வேண்டாமணிஎனும் என் பெயரால் நான் கல்லூரியில் காமெடி பீஸ் ஆகிவிட்டேன். ஆண் தோழர்கள் வேண்டுமென்றே என் பெயரை கூறிவிட்டு பின் தலையையும் உடம்பையும் சொறிந்துக் கொள்வது வாடிக்கையாய் போனது.
       பரசுராமன் சாரும் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் ‘என்ன வேண்டாமணி பிரஸண்டாம்மாஎன்பார்,. நான் எஸ் சார் என்றதும் சிரிப்பலை ஆரம்பிக்கும். அவர் இருந்து பாடம் நட்த்தும் ஒரு மணி
நேரமும் அலைகள் ஓயாது.
       கல்லூரியில் ஆரம்பம் முதல் இறுதி நாள் வரை அவர் நினைவில் ஞாபகம் வைத்திருந்த பெய்ர் எதுவென கேட்டால் என்னுடையதாகத் தான் இருக்கும்.
        ஏன் எனக்கு இப்படி வேண்டாமணி என பெயர் வைத்தீர்கள் என வீட்டில் கேட்காத நாளில்லை. அலுத்தால் போதும்...குலுக்கியதும் திறக்கும் பெப்ஸியை போல் பொங்கி விடுவார் பாட்டி.
        ‘பின்ன...பொட்டப்புள்ளயாவே பத்து பெத்துப் போடுவா உங்காத்தா, பாத்துட்டு சும்மா உட்காரச் சொல்றியா. வேண்டானு பேர் வெச்சதால யாராச்சும் உன்னை வேண்டாம்னு வெளிய புடிச்சு தள்ளினாகளா. வாய பொத்திட்டு வேலய பாருடி. கழுத தெனோம் உன்னோட இதே இராமாயணமா போச்சு.
       வேண்டானு பேர் வெச்சு எதுக்கு என்னை வெச்சிக்கிட்டீங்க.,பேசாம வெட்டி போட்டுற வேண்டியது தான. அக்காங்களுக்கு மட்டும் அட்டகாசமா பேரு வெச்சிருக்கிங்க.
       ஆமாண்டி,உன்னய அப்புடிதான் போட்டுருக்கணும்.பொசக்கெட்ட சிருக்கிக்கு பேச்ச வாரு.
     ம்...அது என்ன ராசியோ, தினம் ஒரு பத்து பேராவது என் திருப்பெயரை கேட்பார்கள்.  நான் பெயரை சொன்னால் போதும்,
என்னது...என்னது...என்ன பேருஎன கேட்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் என் பெயரை சமயத்தில் வெண்டாமணி என் கூப்பிடுவோரும் உண்டு. நான் திருத்தி சொன்னதும் ‘வேண்டான்னே வெச்சிருக்கலாமே, அது என்ன மாதா கோயில் மணியாட்டும் பின்னாடி ஒரு மணி தொங்கிட்டிருக்கு பேருலஎன பி.எச்.டி. லெவலுக்கு ஓவராக ஆராய்ச்சி செய்து எரியும் தணலில் எண்ணெய் விட்டு செல்வர் சிலர்.
       அப்ப்ப்ப்ப்ப்ப்பா....இதோ அடித்து பிடித்து கல்லூரி விரிவுரையாளர் வரை வந்தாயிற்று. இன்று கல்லூரியில் நான் நடத்தப் போகும் முதல் கிளாஸ். என் பெயரை வேண்டாமணி என மெதுவாக கூறினேன். இம்முறை யாரும் சிரிக்கவில்லை. என் மீதிருந்த பயம் கலந்த மரியாதையாக இருக்கலாம்.
       பின் மாணவிகளின் பெயரை கேட்கும் படலம். வரிசையாக ஒர்வொருவரும் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு வர அல்ட்ரா மாடர்னாக உடையணிந்திருந்த மாணவி அவர் முறை வந்த்தும்ஐ யம் இனிபோதும், கம்மிங் ப்ரம் வெல்லூர்என்றாள். நான் அவளை அமரச் சொல்லாமல் பிரமிப்புடன் அப்படியே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளிடம் தாழ்வு மனப்பான்மையோ வெட்கமோ துளியும் இல்லை. நேருக்கு நேராக என் கண்களை பார்த்தாள்.
        ‘ நீ எத்தானாவது பொண்ணும்மா?  ஆர்வக்கோளாறில் இப்போது நான் அவளை கேட்கத் தொடங்கியிருந்தேன்.
  
 நன்றி:தினமலர்             

Saturday, April 7, 2012

பெண் என்பவள்.....


21 வயது கல்லூரி மாணவி வித்யா.  திருமணமாகி ஓராண்டே ஆன நிலை.  சமீபத்தில் தன் கணவனை ஒரு விபத்தில் இழந்துவிட்டாள்.  கணவனின் உடல் இன்னும் வீட்டுக்கு வராத நிலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாள்.  அவள் தற்கொலைக்கு முன் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள்.  அதில் கட்டிய கணவன் இறந்த பின் மனைவிக்கு செய்யும் சடங்குகள் என்னை அச்சுறுத்துகிறது.  என் வீட்டில் உள்ளவர்களோ பழமையில் ஊறியவர்கள்.  என்னால், அந்த இம்சைகளை தாங்க முடியாது.  என் கணவன் சென்ற இடத்திற்கே நானும் போய்விடுகிறேன் என்று இருந்ததாக சொல்லப்படுகிறது.

    வித்யா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்?  தற்கொலைக்கு முன் என்னென்ன நினைத்திருப்பாள்?  சடங்கு என்ற போர்வையில் சதக் சதக் என வெட்டி கூறுபோடும் அவலத்தை நினைத்து பார்த்திருப்பாளோ?

    பிறந்தது முதல் வைத்திருந்த பொட்டும், தலை கொள்ளாத பூவும் 15 நாட்களுக்கு மேல் இனி நமக்கில்லை என்ற நிஜம் சுட்டிக்காட்டியிருக்குமோ?  ஈமக்காரியத்துக்கு வாங்கி வந்த புடவைகளை முக்காடாக போட்டு போட்டே மூச்சு திணறடிக்கும் கூட்டத்திற்கு நடுங்கியிருப்பாளோ?  இனி உன் முகத்தில் விழிப்பது லாயக்கில்லை என சகுனம் பார்க்கும் கூட்டத்திடம் எப்படி காலம் முழுவதும் கழிப்பது என்ற எண்ணமிருக்குமோ?  முகம் தெரியாத அந்த பெண்ணிற்காக… இப்படி என் மனதில் தோன்றிய அடுக்கடுக்கான கேள்விகள்.

    எனக்கு திருமணமான புதிதில் என் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமானார்.  அவரின் மனைவிக்கு வயது 71.  அவர் அழுது ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தபோதே, நான் அத்தை முறை நான் பூவைத்தே ஆக வேண்டும் என்று 3 முழ பூவைக் கொண்டு வந்து அந்த குருவிக்கூடு போன்ற சிறு கொண்டையில் திணித்தனர்.  ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று வினவியதற்கு, இதே இளந்தாரியா இருந்தா  ’பூ என்ன ஜடையே தைப்போம்’ என்றார்கள்.  அடடா!  ஜடை தைக்கும் நேரமா அது… இறந்தவரின் மனைவி யார் என்பது உறவினர்களுக்கு சரியாக தெரிய வேண்டுமாம்.  அது சரி!

    பின் சடலத்தை குளிப்பாட்டும் முன்பு, அந்த பாட்டியையும் எதிரில் அமர வைத்துவிட்டு, தலைக்கு நீருற்றி பழுக்க மஞ்சள் பூசி, 2 ரூபாய் நாணயம் அளவு குங்குமம் இட்டு, பூ வைத்து அவரை அலங்கரிக்கிறேன் பேர்வழி என்று அலைகழிக்கிறார்கள்.  ஏற்கனவே சாப்பிடாமல் அழுது அழுது களைத்திருந்தவருக்கு ஜன்னி வந்து மயங்கியே போனார்.  உடனே அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை.  முதன்முதலில் அப்படியொரு காட்சியை அன்றுதான் பார்த்தேன்.  இப்படியெல்லாமா நடக்கிறது என மனம் பதைபதைத்தது.  சொந்த பந்தங்கள் இதை வேடிக்கை பார்க்கின்றனரே அன்றி, யாரும் தடுக்க முன்வருவதில்லை.

    நாங்களெல்லாம் இதுபோன்ற சடங்குகளுக்கு கட்டுப்படவில்லையா?  இதுபோன்ற கஷ்டங்களை நாங்கள் படவில்லையா என்பதே அவர்களின் கேள்வி.  அவர்கள் வேதனைப்பட்டது உண்மைதான்.  ஆனால், அதேபோன்ற மனவேதனையை இன்னொரு பெண் அனுபவிக்கக் கூடாது என்றல்லா நினைக்க வேண்டும்?

    இதெல்லாம் என்ன ஜுஜுபி.  அந்த காலத்தில் நாங்கள் அனுபவித்ததை எல்லாம் சொன்னால் ரத்தக் கண்ணீரே வடிப்பீர்கள் என்று சொல்லத் தொடங்கினார் அந்த பிராமணப் பெண்மணி.  கேட்ட என்னால் ஒருவார காலத்துக்கு சரிவர தூங்க முடியவில்லை.  அதைப் பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்கிற்கு போவோமா…

    அன்றைய இந்திய சமூகத்தில் குழந்தைத் திருமணம் மிக சகஜம்.  அதேபோல குழந்தை விதவைகளும் அதிகம்.  சென்னை பிரசிடென்சியில் 1911ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு வயது கூட ஆகாத விதவைகள் 31 பேர்.  ஐந்து வயது நிரம்பாத விதவைக் குழந்தைகள் 673 பேர்.  1928ம் ஆண்டு கணக்கின்படி, முப்பது வயது நிரம்பாத விதவைகள் 4 லட்சம் பேர்.  இத்தனைக்கும் அப்போது மக்கள் தொகை மிக மிகக் குறைவு.

    சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1751 முதல் 1791 வரை நடந்த பெண்களின் தற்கொலைகள் பற்றி ஆய்வு செய்த அறிஞர் குணே, தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களில் பெரும்பாலான பெண்கள் பிராமண விதவைகளே என்று கண்டறிந்தார்.  கணவன் இறந்த மறுநொடியே விதவைக்கான சித்ரவதைகள் தொடங்கி விடுகின்றன.  இறந்த புருஷ்னின் சடலத்துக்குப் பக்கத்தில் மனைவியையும் கிடத்துவார்கள்.  குடம் குடமாக தண்ணீர் கொட்டிக் கொண்டே இருப்பார்கள்.  அவளுக்கு சாப்பிட எதுவும் தரமாட்டார்கள்.  குடிக்க ஒரு வாய்த் தண்ணீர் கூட தரக்கூடாது என்பது விதி.  கடைசிச் சடங்குக்கு சுடுகாடு வரை இழுத்துச் செல்லப்படுவார்கள்.  பாடைக்கும் பின்னாலே வருகிற பிராமண விதவையை இதர பிராமணப் பெண்கள் யாரும் தொடக்கூடாது.  காரணம், விதவையானதும் அவள் தீண்டத்தகாதவளாகி விடுகிறாளாம்.  தீண்டத்தகாத சாதிப் பெண்கள் இருவர்தான் அவளை இழுத்து வருவார்கள்.  விதவையின் நிழல்கூட சுமங்கலிகளின் மீது விழக்கூடாது.  நா வறட்சியில் அவள் குடிக்கத் தண்ணீர் கேட்டால் யாரும் தரக்கூடாது.  மீறிக் கொடுத்தால், கொடுத்தவள் தீட்டாகி விடுவாள்.  கொடுத்தவளுக்கு பெரிய தண்டனைகள் காத்திருக்கும்.  விதவையை இழுத்துச் செல்லும் தீண்டத்தகாத பெண்கள்தான் அவள் கழுத்து, காது, மூக்கில் இருக்கும் நகைகளை விலக்குவார்கள்.  கணவனுக்கு கொள்ளி வைக்கப்படும்போது, விதவைப் பெண்ணை ஆற்றில் இறக்கி கழுத்து வரை நீரில் நிற்க வைப்பர்.  கணவனின் பிணம் வெந்து முடியும் வரை அப்படியே அசைவின்றி நீரில் நிற்கவேண்டும்.  எத்தனை மணி நேரமானாலும், சரி.

    வயதுக்கு வரும் முன்பே திருமணமும் முடிந்து விதவையாகிவிட்ட குழந்தைகள், வலுக்கட்டாயமாக தாய் வீட்டிலிருந்து வரவழைத்து கணவன் வீட்டில் வேலைக்காரியாக்கிவிடுவதும் நடந்திருக்கிறது.  அப்படி ஒரு இளம் விதவை பின்னாளில் விதவைகள் இல்லத்தில் தங்கிப் படிக்கச் சென்றபோது, அவளுக்குப் பதிலாக நியமித்திருக்கும் தங்கள் வீட்டு பணிப்பெண்ணுக்கு ஆகும் செலவை நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று (இறந்துவிட்ட) கணவன் வீட்டார் விடுதி நிர்வாகத்திடம் கேட்டுப் பெற்ற நிகழ்ச்சியெல்லாம் நடைபெற்றிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    அப்பப்பா… அதிலிருந்து நமது சமூகம் இவ்வளவு தூரம் முன்னேறி வந்துவிட்டது என்பதை நினைத்துப் பார்க்கவே எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது.  ஆனால், இவை எல்லாம் அவ்வளவு எளிதில் நடைபெறவில்லை.  அந்தரத்தில் ஆபத்தாய் கம்பி மேல் நடந்து கொண்டிருந்தது, தற்போது அதற்கென தனியே கப்பி சாலை போட்டு நடந்து கொண்டிருக்கிறோம்.  அவ்வளவுதான் வித்தியாசம்.  வேத புராணங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துக்கள், நீதி இலக்கியங்கள் என எதை திருப்பினாலும், அவற்றில் எதிலும் பெண்ணுக்கு சரியான நீதி இல்லை என்ற கருத்து உறுதியாகிறது.  இன்று ஆண்களிடமிருந்து பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று இன்று வாய் கிழிய பேசுகிறோம்.  ஆனால், பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற ரீதியில்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.

    இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தேன்.  நான்கு மாதங்களுக்கு முன் தன் கணவனை இழந்த கைம்பெண் ஒருவர் விழாவிற்கு தன் தோழியுடன் வந்திருந்தார்.  அவரை நன்கு அறிந்த சில பெண்கள் என் முன் இருக்கையில் குசுகுசுவென பேசிக்கொண்டது என் காதுகளில் கேட்டது.   ’புருஷன் செத்து வருஷம் திரும்பல.  அதுக்குள்ள கல்யாணத்துல கலந்துக்க வந்துட்டா பாரு’ என்றனர்.  கேட்பதற்கே கஷ்டமாக இருந்தது.  விதவைப் பெண்கள் எப்படி வாழ வேண்டுமென்பதை அவர்களே முடிவு செய்யும் சுதந்திரம் தேவை.  பிறந்ததில் இருந்து ஆசையாய் வைத்துக்கொண்டிருந்த பூவுக்கும், பொட்டுக்கும் கணவனை அடையாளமாக சொன்னது யார்?  கணவன் கட்டிய தாலி என்பதால் அதை தூக்கி எறிய வேண்டுமா?  நேற்று வரை சூட்டி அழகுப் பார்த்த பூவையும், பொட்டையும், இனி தன் வாழ்நாள் முழுதும் சூட்ட அருகதையற்றவள் என்பதை ஒரு பெண்ணால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?  இதனால்தான் பல இளம் விதவைப் பெண்களுக்கு மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது.

    இதுபோன்ற சடங்கு என்ற பெயரில் பெண்களின் சந்தோஷத்தை பறிப்பது சக பெண்கள்தான்.  மதங்களும் சாதிகளும் பெண்களுக்கென்றுதான் நிறைய சட்டத்திட்டங்கள் வகுத்திருக்கிறது.  ஆயிரக்கணக்கான இதயங்களில் இருக்கும் இந்த கேள்விக்கு ஒன்று கூடிதான் பதில் தேடவேண்டும்.  விடியலை உருவாக்க வேண்டும்.  சில கேடுகளை களைய போரிடத்தான் வேண்டுமென்றால் போரிடுவதில் தவறில்லை.

    நகர்ப்புறங்களில் இந்த விஷயத்தில் சற்று தேவலாம் என்றாலும் சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லை என்றே படுகிறது.  அது சரி, மாற்றத்துக்காக குரல் எழுப்பும் பெண்ணை வீட்டிலும் சரி, வெளியிலும் சரி திமிர் பிடித்தவள் என்று முத்திரை குத்தி ஒதுக்குவதுதான் நம் சமூக வழக்கமாயிற்றே.  எங்கள் எதிர்வீட்டில் வசித்த ஒரு நபர் சாகும் தருவாயில் தன் மனைவியிடம், நான் இறந்த பிறகு நீ கண்டிப்பாக பூ சூடிக்கொள்ள வேண்டும், பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.  அவர் இறந்த பிறகு அந்த பெண்ணின் தாயாரும், மாமியாரும் அவளை அவள் கணவர் சொன்னது போன்று வாழவிடவில்லை.

    அழகு என்பது ஆடம்பரம் அல்ல, அதுவும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    ஒரு சீன பழமொழி சொல்கிறது… சந்தேகம் வரும்போது கேள்வி கேட்கிறவன் அந்தநேரம் மட்டும் முட்டாள்.  கேள்வி கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாள்.  நாமெல்லாம் வாழ்நாள் முட்டாள்களா?

வழுக்குமரமான படித்துறை


         

         சமீபத்தில் இராமேஸ்வரம் கோவிலுக்கு
குடும்பத்துடன் சென்றிருந்தேன்.அங்கே தினமும்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுகின்றனர்.
அப்படிப்பட்ட இட்த்தில் படித்துறை எப்படி இருந்தது
தெரியுமா? படி தெரியாத அளவிற்கு முழுதாக பச்சை
பசேலென பாசி படிந்திருந்தது.
     அதை பார்க்காமலும் கவனக்குறைவாலும் எண்ணற்ற
பக்தர்கள் வழுக்கி விழுந்தனர். நாங்கள் அந்த படித்துறையில்
இருந்த ஒரு மணி நேரத்தில் கிட்ட்த்தட்ட நூறு
பேருக்கு மேல் வழுக்கி விழுந்தனர்.அவ்வளவு பாசி.
யாருக்காவது ஏதாவது ஆகிவிடுமோ என மனது ’திக்திக்’
கென அடித்துக் கொண்டது.
           வட நாட்டிலிருந்து வந்திருந்த சேட்டு
ஒருவர் இப்படி விழுந்து வைக்க,திடீரென அவருக்கு நெஞ்சு
வலி வந்துவிட்டது. நல்ல காலம்! அருகில் குளித்துக் கொண்டிருந்த
மருத்துவர் ஓடி வந்து முதலுதவி சிகிச்சை அளித்தார்.
சேட்டு குடும்ப பெண்கள் எல்லோரும் அழுது தீர்த்து
விட்டனர்.
         அந்த படித்துறையை வடநாட்டு மகான்
ஒருவர் தான் கட்டி பக்தர்களுக்காக தானம்
கொடுத்துள்ளார்.அதை கோவில் நிர்வாகமோ நகராட்சி நிர்வாகமோ
கண்டுகொள்வதே இல்லை போலும். அப்பப்பா... ஊர் திரும்பும் போதும்
ரயிலில் இப்படி வழுக்கி விழுந்தவர்கள் பற்றிய கனவே வந்து
பயமுறுத்தியது. நீங்களும் பார்த்து போங்க...

திருமண விழாவில்...

       
                


        சமீபமாக பெரும்பாலான திருமண விழாக்களில்
என் கண்ணில் பட்ட சில காட்சிகள் இதோ உங்களுக்காக...
திருமண விழாவில் கலந்து கொள்ளும் பெரும்பாலானவர்கள்
வந்த நோக்கத்தைக்கூட மறந்து செல்போனில் உரையாடியபடியே
கெட்டிமேளம் கொட்டுகையில் கடனே என அட்சதையை விசிறி
விட்டு பந்திக்கு இடம்பிடிப்பதில் மும்முரமாய் உள்ளனர்.
           நம்ம வீட்டு விசேஷத்திற்கு வந்தார்களே
அதனால் போயாக வேண்டுமே என்ற நிர்பந்த்த்தில் கடனை
கழிப்பது போல் பாதி பேர் வந்து விட்டு செல்கின்றனர்.
          புது டிசைன் நகை,பட்டுப்புடவையை பார்வையிட
ஒரு கூட்டம்.
           குறைகளை பட்டியலிட வாயில் பீடா குதப்பியபடி   
இறுதிவரை ஒரு குழுவாய் குழுமியிருக்கும் கூட்டம்.
            ரிசப்ஷனில் மணமக்களுக்கு பரிசு கொடுக்க
பெரிய ‘கியூவில் நிற்கும் போது ஏற்படும் சலிப்பை
பெரிதாக முணுமுணுக்கும் சராசரி கூட்டம். இப்படி நிறைய...
   
       ஆனால், நம்மில் எத்தனை பேர் மணமக்களை மனதார
வாழ்த்துகிறோம்? போன நோக்கத்தைக் கூட மறந்து
கடனை கழிக்க அல்லவா சென்று கொண்டிருக்கிறோம்?
        மணமக்கள் இருவரும் ஒன்றுகூடி பல்லாண்டு
ஒற்றுமையாக வாழ வேண்டும் என அட்சதை போடும்
போதும்  பரிசு கொடுக்கும் போதும் ஒரே ஒரு நிமிடம் மனமுவந்து
வாழ்த்தி விட்டு வரலாமே. கூட்டு பிரார்த்தனை போல
கூட்டு வாழ்த்திற்கும் ஒரு நல்ல சக்தி [வைப்ரேஷன்] உண்டு.
நமக்கும் விழாவில் கலந்து கொண்ட்தில் ஆழ்ந்த திருப்தி
ஏற்படும். ஓகேவா?

Friday, April 6, 2012

நான்காவது கோணம்


இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன் சில கேள்விகளை எனக்குள்ளேயே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டேன்.  ஆம் இது சரிதான் என்ற முடிவுக்கு பின்னரே இதை எழுதுகிறேன்.  என்னை கடந்து சென்றவர்களில், பார்த்த உறவுகளிடத்தில், தெருவாசிகளிடத்தில் ஏன் பூ விற்கும் பாட்டியிடமிருந்தும் நான் ஆழ்ந்துணர்ந்த சில கருத்துக்களை இங்கு முன்வைக்க இருக்கிறேன்.  இதற்கு கண்டன குரல்கள் கூட ஒலிக்கலாம்.  ஏனெனில் நான் சார்ந்த இப்பெண் குலத்திடமிருக்கும் சில குறைகளை இங்கே அலசியிருக்கிறேன்.  நுழைவோமா….


    எனக்கு நன்கு அறிமுகமான குடும்பம்.  சில வருடங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.  சில நாட்களிலேயே மாமியார் மருமகளுக்குள் கருத்து வேறுபாடு.  சில பல மனக்கஷ்டங்களுக்குப் பிறகு மருமகள் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டாள்.  சமாதானம் பேச வந்த குடும்ப உறுப்பினர்களிடம் அந்த மருமகள் முன்வைத்த வாதம் என்ன தெரியுமா?  என் மாமியாரும் மாமனாரும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.  அதன் பிறகே என் கணவருடன் வாழ்க்கை நடத்துவேன் என்பதே.  இதைக் கேட்டு அந்த குடும்பமே அதிர்ச்சி அடைந்தது.  மிக மிக அற்பமான ஒரு சிறு விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டு இறுதியில் பலூனைப் போல் வெடித்துப் போயிற்று.

    இதில் விசேஷம் என்னவெனில் இருவரையும் தனிக்குடித்தனம் வைக்க அவனின் பெற்றோர் தயாராக இருந்தனர்.  கணவனுக்கு தன் மனைவியின் மேல் அன்பிருந்தும் அவள் சொன்ன அந்த வார்த்தைகளில் இருந்த உக்கிரம் அவர்களை பிரித்துவிட்டது.  ‘என் பெற்றோரை பலர் முன்னிலையில் அவள் காலில் விழ வைத்துதான் எனக்கு வாழ்க்கை என்ற நிலை வேண்டாம்’ என்று அந்த இளைஞர் விலகிக் கொண்டார்.

    ‘ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்’ என சும்மாவா சொன்னார்கள்?  பூத்துக் குலுங்க வேண்டிய மரம் வீணாக பட்டுப்போய் யாருக்கும் பயன்படாமலேயே போய்விட்டது.  இதற்கெல்லாம் மூலகாரணம் அறியாமலும் அவசரத்திலும் நம் வாயிலிருந்து வெளிப்பட்டு விடும் அரக்க சொற்கள்.

    எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் எழுதிவிட்டுப் போன ‘தீயினால் சுட்ட புண்’ என்ற குறள் இப்பொழுதுள்ள நடைமுறை வாழ்க்கைக்கும் பொருந்துகிறதென்றால் மனித உணர்வுகள் என்றும் சாகாவரம் பெற்றதற்கு சான்றாய் அல்லவா இருக்கிறது.

    குதிரைக்கு கடிவாளம் போட்டிருப்பது போல பெண்களாகிய நாம் நம் வாயினுள் சிற்சில பூட்டுகள் போட்டுக்கொள்வது அவசியமாகிறது.

    ‘சொந்தங்கள் சொல்லத்தானே பந்தங்கள்
    சோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள்’

    என்ற கவிதை வரிக்கு ஏற்ப வாழ்க்கையின் தத்துவங்கள், மாறுபட்டு வேறுபட்டு பயணிக்கின்றன.

    அதுமட்டுமல்ல பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு பல புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.  ஆனால் எத்தனை பேர் இதை சரியாக பயன்படுத்துகிறார்கள்?  புகுந்த வீட்டின் மேல் இருக்கும் தங்கள் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ளவே வரதட்சணை தடுப்பு சட்டத்தை பெரும்பாலும் மக்கள் பிரயோகிக்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

    தற்போதெல்லாம் தம் பெண்ணுக்கு வரன் தேடும்போதே ‘மாப்பிள்ளையின் பெற்றோர் உடன் வசிக்கக்கூடாது, தனி வீடு பார்த்து பால் காய்ச்சிய பிறகுதான் தட்டையே மாற்றுவோம்’ என அடம் பிடிக்கும் பெண்ணை பெற்றவர்கள் இன்று பெருகி போயுள்ளனர்.  இந்த மனோபாவம் நம் நாட்டின் பாரம்பரிய நடைமுறைக்கு மாற்றாக உள்ளது.  நம்மை எதைநோக்கி அழைத்துச் செல்கிறது?  அப்படியானால் பிள்ளையை பெற்றவர்கள் தன் பிள்ளையை கட்டிக் கொடுத்துவிட்டு ஒரேடியாக தலைமூழ்கிட வேண்டுமா?

    ‘என் பெண் இங்கு சுதந்திரமாக வளர்ந்தவள்.  அவள் அங்கு போய் இன்னொருவருக்கெல்லாம் அடங்கி ஒடுங்கி ஏன் இருக்க வேண்டும்?” என்று நம்முன் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள், பெண்ணை பெற்றவர்கள்.

    இப்படிப்பட்ட எண்ணங்களை இளைய சமுதாயத்திடம் விதைத்தது யார்?  ஒன்றை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.  விதைப்பதை ஒருநாள் அறுத்துத்தான் ஆக வேண்டும்.  பெரியவர்களிடத்தில் அன்பு செலுத்தி அவர்களிடம் பணிவாக இருப்பது ஒன்றும் அடிமைத்தனம் இல்லை.  ஆத்மார்த்தமாக உணர்ந்தால் அது ஒரு பேரின்பம்.  அதுமட்டுமில்லை அவர்களின் மீதுள்ள மதிப்பும் சமூக அந்தஸ்தும் உயரும்.

    பெரியவர்களை மதிக்கும் தன்மை பரவலாக குறைந்து வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.  ஒரு கல்லூரிப் பேருந்தில் பயணிக்க  நேர்ந்தபோது கேட்ட வாசகம் இது.  ‘ஏய் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்... கனவெல்லாம் வருதா?’ ’அடச்சீ, அந்த வீட்டுல நுழைஞ்ச மறுநிமிஷமே அவங்க வீட்டு ஆளுங்களோட நெட்வொர்க்க கட் பண்ணனும்.  அப்பதான் அவரோட தொடர்பு எல்லைக்கு உள்ளே நான் இருக்க முடியும்.  அதைத்தான் யோசிச்சிட்ருக்கேன் என்றாள்.  கேட்பதற்கு கஷ்டமாக இருந்தது.  முன்பெல்லாம் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெண்களை உதாரணம் காட்டுவர்.  இப்படியே போனால் இனி இப்படிப்பட்ட சொல்லுக்கு அகராதியில் தேடித்தான் பொருள் காண இயலுமோ என்னவோ?

    பெண் சுதந்திரத்தை பற்றி நாம் வாய் கிழிய பேசுகிறோம்.  கிடைத்த சுதந்திரத்தை சரிவர பயன்படுத்த தெரிய வேண்டும்.  மேலும் தவறான வழிகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் வேண்டும்.  சில பெண்கள் தம் கணவர்களை தான் வளர்க்கும் நாய்க்குட்டியைப் போல் கருதுகிறார்களோ என்ற எண்ணம் பல சமயங்களில் ஏற்படுகிறது.

    கணவனின் பேச்சை நான் கேட்பதில்லை என்பதை பொது இடங்களில் எப்படியாவது வெளிப்படுத்த எண்ணுகிறார்கள்.  பலர் இருக்கும்போது கணவன் எதிர்த்துப் பேச மாட்டான் என்ற நம்பிக்கையில் இதுதான் தருணம் என்று சத்தமிடுகிறார்கள்.  வாழ்வில் உள்ள பிடிப்பை நாம் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், பிறரிடம் வேஷமற்ற பாசத்தைக் காட்ட வேண்டியது அவசியம்.  பிறரிடம் பிரியமாக இருப்பது என்பது பிறருக்கு நாம் செய்யும் நன்மை மட்டுமல்ல, நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மையும்தானே.

    பாசமாக  இருப்பவர்கள் மற்றவர்களின் இதயத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்கிறார்கள்.  இப்படிப்பட்ட பெண்கள் வசதியற்றவர்களாக இருந்தாலும், பெரிய பொறுப்பில் இல்லாதிருந்தாலும் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார்கள்.  பாசமிகுந்தவர்களாக நாம் நடந்து கொள்ளும்போது நாம் புறக்கணிக்கப்படுவது இல்லை.  நாம் செய்யும் தவறுகள் கண்டுகொள்ளப்படுவது இல்லை.  நம் குறைகள் மறைக்கப்படுகின்றன.  நமக்கான முன்னுரிமை எவ்விடத்திலும் அதிகரிக்கிறது.

    நிறைந்த சபையிலும் பெண்களுக்கு நல்ல முக்கியத்துவம் கிடைக்கிறது.  அடுத்து, பெண்களுக்கு என்று இயற்கையாகவே இருக்கும் பொறுப்புகளை தண்டனையாகப் பார்க்க வேண்டாமே… ப்ளீஸ்! ஆதை அனுபவித்துத் தான் பார்க்க வேண்டும்.  குழந்தை வளர்ப்பு பற்றிதான் குறிப்பிடுகிறேன்.  விதிக்கப்பட்ட ஒன்றை, மாற்று இல்லாத ஒன்றை, வேறு வழியற்ற ஒன்றை பார்க்க வேண்டிய பக்குவத்தில் பார்த்தால் அது சுகானுபவம்!  பார்க்கக் கூடாத பாணியில் பார்த்தால் அதுவே தண்டனை!  நவீன யுவதிகள், வேலைக்கு போகும் பெரும்பாலான பெண்கள் இந்த நினைப்பிற்கு விதிவிலக்கல்ல.

    குழந்தைகளை வளர்க்க இயலவில்லை, பார்த்துக் கொள்ள இயலவில்லை என்று ஹாஸ்டலில் கொண்டு போய் தள்ளுவது அதிகமாக உள்ளது.  ‘நான் அவன் வருங்காலம் சிறப்பாக இருக்கத்தானே இப்படி ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைக்கிறேன்.  அதனால் தான் அவனை ஹாஸ்டலில் சேர்த்தேன் என்றார் ஒரு இளம் தாய்.

    “உங்களுக்கு இருப்பது போல் எனக்கும் ஓய்வில்லாத வேலை உள்ளது.  என்னுடைய படிப்பு கருதி விடுதியில் சேர்த்தது போல் உங்களின் பாதுகாப்பு கருதி முதியோர் இல்லத்தில் சேத்திருக்கிறேன்.  அவ்வளவுதான்” என பிற்காலத்தில் கூலாக பை சொல்லிவிட்டு உங்கள் பிள்ளை செல்லலாம். 
                                         
    ஜப்பான், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் குழந்தை பிறப்பே வேண்டாம் என பெண்கள் தயங்குகிறார்கள்.  காரணம் பெண்களுக்கு இருக்கும் இயற்கையான தாய்மை குணம் மெல்ல மெல்ல மறைந்து வருவதுதான்.  பொருளாதாரத்தில் உலக நாடுகளில் முன்னிலையில் இருக்கும் ஜப்பானின் குடும்ப நிகழ்ச்சிகளில் இன்றைய நிலை என்ன தெரியுமா?  திருமணம், இறப்பு என்று எதிலும் கலந்துக் கொள்ள அவர்களுக்கு நேரமின்றி ஏஜென்சியை நாடுகின்றனர்.

    திருமண வைபவங்களுக்கும், துக்க விசாரிப்பிற்கும் ஆட்களை வாடகைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் அங்கு பெருகி விட்டனவாம்.  திருமணங்களில் வெறுமனே விசாரிப்பதற்கு ஒரு ரேட், சாப்பிட்டு வருவதற்கு ஒரு ரேட், மணமேடையில் ஏறி மணமக்களை வாழ்த்தி இரண்டொரு வார்த்தை பேசுவதற்கென எக்ஸ்ட்ரா ரேட்.  அதேபோல் தான் துக்கம் விசாரிக்கவும்.  இறந்தவரின் புகழ் பாடி அழுதுவிட்டு வரவும் எக்ஸ்ட்ரா சார்ஜ்.

    ஒரு மிகப்பெரிய நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளாக இந்த சேவையை (?) செய்து வருவதாக சொல்லி நம்மை அதிர்ச்சியடைய செய்கிறார்கள்.  பெண்களாகிய நம்மிடையே இருக்கும் பண்புநலன்கள் குறைய குறைய இப்படிப்பட்ட கூத்துக்கள் நம் நாட்டில் நடக்கவும் சாத்தியங்கள் இருக்கிறது.  இப்படியே போனால் ஒவ்வொரு வீடும் ஒரு அபார்ட்மெண்ட் ஆகிவிடும்.