Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, December 31, 2010

எச்சில் இலை பலகாரம்



      அந்த விஸ்தாரமான திருமண மண்டபத்தில் திருமணம்
முடிந்து முதல் பந்தி நடந்துக் கொண்டிருந்தது.  சாப்பிட்டுக்
கொண்டிருந்தவர்களின் இலையையே வைத்தக் கண்
வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பவுனு.

      பம்மி பம்மி போனவள் நீண்ட கழியின் கீழே கும்பலாய்
அமர்ந்திருந்த அவளின் சகாக்களை நோக்கி மெல்ல
கிசுகிசுத்தாள்.

     “ஏய் குப்பு, நாகு, பாப்பா உங்கள நம்பிதான்டீ இந்த
காரியத்துல இறங்குறேன்.”

     “அட, நீ ஒன்னு.  எத்தினி தபாதான் அதையே சொல்லீனு
கிடப்ப.  எல்லாம் பாத்துக்கலாம் வா…”  வேகமாக
இடைமறித்து வசனம் பேசினாள் சாயம் போன கத்திரிப்பூ
சேலை அணிந்திருந்த பாப்பா.

     “அதில்லடீ, கல்யாணத்துக்கு வந்துக்குற ஜனத்த
பாத்தா மிச்சம் மீதி மீறுமான்னு தெரில பாப்பா.  அதான்,
ஒரே கவலையா கீது… வேன்னா என் பொண்ணு வனஜாவோட
தோட சேட்டு கடையில வெச்சி ஓட்டல்ல சாப்பாடு
சொல்லிடலாமா… ம்..”

     “யக்கா, சும்மா கிட.  ஏற்கனவே அந்த சுப்பு கடன்காரப்
பய பத்தாயிர ரூவா கடனுக்கு தினம் வந்து கூவிட்டு போறான்.
இதுல எங்கிருந்து நீ செலவு வெச்சிக்கப் போற.  பாவம், நம்ம
வனஜா குட்டி போட்டுனு இருக்கறதே அந்த ஒத்த தோடுதான்.

      யக்கா, காத்தாலயே சமையக்கட்டாண்ட பாத்தேன்.
புலவு சோறு ஒரு ஊருக்கே ஆவுறாப் புல கிளறி வெச்சிருக்கு.
புலவு சோறு, வெள்ள சோறு, குழம்பு, ரசமெல்லாம் மீந்தா
நமக்கே குடுத்துடுவாங்கக்கா.  ஆனா, எந்த கல்யாணத்துலயும்
தித்திப்ப மட்டும் வூட்டுக்குத்தான் எடுத்துனு பூடுவாங்க.  அதே
கணக்கா வடை கூட கிடைக்காது.  இலை எடுக்குறச்சயே பாத்து
எடுத்து வச்சாத்தான் உண்டு.”

    “பாத்து நாகு… எச்சில் பட்டது.  பாதி சாப்பிட்டு மீதி
வச்சது இதெல்லாம் வேணாம்.  இந்த வயசான ஆளுங்க,
சர்க்கரை நோவுக்காரங்க இவங்கெல்லாம் சாப்புடாம வுட்டு
வெச்சிருப்பாங்க.  அத மட்டும் தனியா கவருல போட்டு
எடுத்தாந்திடுங்க.  ஒரு இருவத்தஞ்சு தேறுச்சுனா போதும்.
மாப்புள்ள வூட்டு ஜனத்துக்குத்தான்.”

     “சரி.. வனஜா குட்டிய சிங்காரிச்சுனு இருக்க சொன்னியா,
மாப்புள்ள வூட்டுக்காரங்க டான்னு 1 மணிக்கு வந்துடுவாங்கன்னு
சொன்னே.  நீ போறதுக்கே எப்படியும் 12 ஆயிடும்.”

     “ம்… சொல்லிட்டுதான் வந்துருக்கிறேன்.  எப்படியோ…
மாரியாத்தா இந்த சம்பந்தத்தையே முடிச்சி குடுத்துடு, ஆடிக்கு
முந்தியே ஒரு தபா கூழ் காச்சி ஊத்துறன்டீயம்மா” என்றபடி
மேலே பார்த்து கண்மூடி கும்பிட்டாள் பவுனு.

      தாலி  இல்லாத அவளின் வெறுங் கழுத்தில் கத்திரி
வெயிலின் புண்ணியத்தில் மொட்டு மொட்டாய் வியர்க்குருகள்
கண்ணை உறுத்தின.  பச்சை நிற தேய்ந்த ரப்பர் வளையல்கள்
கணக்கு வழக்கின்றி இரு கைகளிலும் மாறி மாறி அணிந்திருந்தது
அவளுக்கு எடுப்பு கூட்டவில்லை.  நைந்து போன ரேசன் சேலை,
தொள தொள ரவிக்கை, தாரில் பால் கலந்தாற்போன்ற நிறம்.

      பந்தி முடிவதை பார்த்து கையில் இலை அள்ள பெரிய
கூடையும் இடுப்பில் சொருகிய கவர் வெளியே
தெரியாதவண்ணம்புடவை கொசுவத்தில்
மூடியபடியுமாக இலை எடுக்க பந்தி சபைக்கு வந்தாள்.
அவளின் சகாக்களும் சேர இலை எடுக்கும்படலம்
ஆரம்பமானது.

      பந்தி பார்ப்பவர்களின் “ம்.. சீக்கிரம், ஆச்சா, முடிஞ்சுதா
சுத்தம் பண்ணு விரசா…” போன்ற அதட்டல் உருட்டல்
பேச்சுக்களின் இடையே இவர்களின் தித்திப்பு எடுக்கும்
தேடல் கசந்தது.

     “நின்னு நிதானமா எடுத்தா நாலுல ரெண்டு பொறுக்கலாம்.
அப்படி விரட்டி காதாண்ட கத்துறானுவ, அவங்க எதிரில் எப்புடி
பவுனு எடுக்க” சிணுங்கினாள் குப்பு.

     எப்படியோ, இரண்டே இரண்டு ஜாங்கிரியை பொறுக்கிக்
கொண்டு வந்திருந்தாள் நாகு.

    “ஐயையோ, இந்த கல்யாண சாப்பாட நம்பி மோசம்
போயிடுவனா” பதறினாள் பவுனு.

     “மொத ரெண்டு பந்திக்குத்தான் நம்மட்ட சீறுவாங்க.
பொறவு ஒரு ஈகாக்கா கண்டுக்காது.  பாத்துக்கலாம் தைரியமா
இருக்கா,” நம்பிக்கை கொடுத்தாள் பழையபடி பாப்பா. 
இரண்டாம் பந்தியில் ஒரு பத்து ஜாங்கிரி, ஒன்பது வடை என
சேர்ந்தது.  நாலு பந்தி முடிய 28 ஜாங்கிரி, 30 வடை, கொஞ்சம்
சிப்ஸ் என இருந்தது.

      “அடியே பாப்பா, சத்தரத்துக்காரர்கிட்ட சொல்லி மீந்த
பலகாரத்த குடுக்க சொல்லுடி.  எனக்கும் மணியாவுது.”

      மெல்ல சத்தரத்துக்காரர் காதில் போட்டாள் பாப்பா.
எண்ணெயில் போட்ட கடுகாக தாளித்தார் சத்தரத்துக்காரர்.
“அப்படியின்னா அவசரம், கலெக்டர் வேலைக்கா ஓடப்
போறீங்க? இன்னிக்கு மீதி கீதி எதுவும் கிடைக்காது. 
பக்கத்துல இருக்குற பார்வையற்றோர் பள்ளிக்கு
சாப்பாடெல்லாம் போகப் போவுது. இன்னும் 5 நிமிஷத்துல
வேன் வந்துடும்.  ஆக்கி அரிச்ச பாத்திரத்த அலசி எடுக்குற
வேலைய பாரு… போ… போ…”

       தலையில் இடிவிழுந்த கதையாக கேட்டு மருகினாள் பவுனு.
பாப்பா, நாகு, குப்புக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. 
வூட்டுல கிடக்குற வேலய வுட்டுட்டு இந்த வேலைக்கு வந்ததே
இந்த சாப்பாட்ட நம்பி தான்.  சும்மா இருக்குற நாளெல்லாம்
அண்டா சோறு குடுப்பாங்க.  இப்படி நம்பி மோசம்
போயிட்டேனே.  கண்கள் கலங்கிவிட்டது பவுனுக்கு.

      இனி வீட்டிற்கு போய் வனஜாவின் தோடை அடகு
வைப்பது என முடிவிற்கு வந்தவளாய் கண்களின் வழியே
எட்டிப்பார்த்த கண்ணீருக்கு முட்டுக்கட்டை போட்டபடி
தோழிகளுக்கு  கைகளால் சைகை செய்தபடி புறப்பட்டாள்.

      பார்வையற்றோர் பள்ளி வேன் வந்து வாசலில் நின்றது.
தயாராக இருந்த சாப்பாட்டை எறும்பை போல் வரிசையாக
வண்டிக்கு எடுத்துச் சென்றனர் சப்ளையர்கள்.

      அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த பட்டு
வேட்டி நபரிடம் பம்மி சென்ற பாப்பா கும்பிடு போட்டபடி
மெல்லகேட்டாள்.  “ஐயா, எங்க புள்ள குட்டி எல்லாம்
வூட்டுல பசியில் காத்துக்கினு கிடக்குதுங்க.  கொஞ்சம்
புலவு சோறும் சால்னாவும் மட்டும் கொடுத்தாக்கா
உங்களுக்கு புண்ணியமாய் போவும் சாமி.”

     அந்த பட்டு வேட்டி நபருக்கு முகம் சுருங்கிப் போனது.
என்ன நினைத்தாரோ சற்று நேரத்திற்கெல்லாம் “யோவ்,
 அந்த ரெண்டு டிபன அப்படியே நிறுத்து.  இவங்களுக்கு
கொடுத்துடு. நம்ம விசேஷத்துக்கு வேலை செஞ்சவங்க. 
திருப்தியா போவட்டும். அதான் நிறைய இருக்கே.”

      நொந்துக் கொண்டு வெளியேறுகையில் பவுனுக்கு காதில்
தேன் ஊற்றுவதாய் இருந்தது இந்த சேதி.

     “யக்கா… இந்த இரண்டு டிபனையும் நீயே வூட்டுக்கு
எடுத்துனு பூடு.  நாங்கெல்லாம் இந்த சாமான துலக்கி
கவுத்துட்டு வர்றோம்.”

      “சரி டீ,” கைகளில் இரண்டு டிபனையும் எடுத்துக் கொண்டு
மகிழ்ச்சியுடன் கிளம்பினாள்.  இடுப்பு மறைவில் சொருகியிருந்த
கவர் வழுக்கி விழுந்து மூன்று ஜாங்கிரி கீழே விழ சரியாக வந்து
சேர்ந்தான் சத்திரத்துக்காரன்.

     “ஐயா, இதுங்களுக்குப் போய் பெரிய மனசு பண்ணீங்களே.
 நீங்க ஸ்வீட்டே கொடுக்கல.  சொல்லாம கொள்ளாம திருடினு
போவுதுங்க.”

      இத்தனை வருஷத்துல எவ்வளவு உழைச்சி தேய்ஞ்சும்
திருட்டு பட்டம் வாங்கியதில்லை பவுனு.  நிலை குலைந்து
நின்றுவிட்டாள்.  கண்களிலிருந்து குபுக்கென கண்ணீர்.

     விடுவிடுவென நடந்து சத்திரத்துக்காரன் முன்னால்
வந்தாள் பாப்பா.

    “யோவ், உனக்கு தெரியுமாய்யா.  அந்தக்கா எடுத்தத நீ
பாத்தியா, சாமி மேல சத்தியம் பண்ணு.  எங்க புள்ளைங்க
மேல சத்தியமா சொல்றோம், பந்தியில இருந்த எச்செலயில
மிச்ச மீதிவச்ச தித்திப்பதான்யா காஞ்சு போன எங்க புள்ள
குட்டிங்களுக்கு தூக்கினு போறோம்.  அதுகூட
பொறுக்காதாய்யா உனக்கு.”

     இடைமறித்த பட்டு வேட்டி நபர் சத்திரத்துக்காரரை
அமைதிப்படுத்தி பவுனை அனுப்பி வைக்கும்படி சைகை
செய்தார்.

      தகிக்கும் வெயிலில் வெறுங்காலுடன் வீட்டிற்கு வந்து
சேர்ந்த பவுனுக்கு  இந்த சோத்துக்கா இந்த கதியென… விசிறி
கடாசிவிடலாம் போன்ற தோணல்.

     மெல்ல எடுத்து வந்த சோத்தை வாளியில் கொட்ட
யத்தனித்தாள்.

      “வனஜா… வனஜா… தயாராயிட்டியா, என்னடி பண்ற,
ஒரு எட்டு இங்கு வா…”

      கூப்பிட்ட குரலுக்கு பதில் வராததால் அந்த பத்துக்கு
இருபதென தடுக்கப்பட்ட வீட்டில் தேடினாள்.  கண்ணாடியின்
மேல் ஒட்டப்பட்டிருந்த அந்த கடிதத்தை எடுக்க அவள் கைகள்
நடுங்கியது.

      அம்மா, என்னை மன்னிச்சிடு.  உனக்கு எத்தினி முறை
ஜாடமாடயா சொல்லியும் நீ புரிஞ்சுக்கல.  உனக்கு ஜென்ம
பகையான நம்ம மாமா பையன் அருணோட கல்யாணம்
கட்டிக்கினு  இந்த ஊரை விட்டே போறேன்.  என்னைத்
 தேடாத.இப்படிக்கு வனஜா.

      கண்கள் இருள தலையில் கைவைத்தபடி அப்படியே
சாய்ந்தாள் பவுனு.  அழக்கூட திராணியின்றி அண்ணாந்து
வெறித்துக் கொண்டிருந்தாள்.

வீடெங்கும் புலவு சோறின் வாசம் பரவிக் கொண்டிருந்தது.


 நன்றி:தேவி

Thursday, December 30, 2010

அவன்.....அவள்.....

      சில்லென்று முகத்தில் அறைந்த அந்தக் குளிர்
காற்றை ரசித்தபடியே டூவீலரின் வேகம் குறைத்தான்
அசோக்.  ஒரு ‘யூ டர்ன்’ அடித்து யமஹாவை போர்டி
கோவில் நிறுத்தினான்.  சிமியின் மாருதி நின்றிருப்பதைப்
பார்த்ததும் இரட்டை சந்தோஷம்!

     உள்ளே நுழைந்தவனை “என்ன இன்னிக்கு இவ்வளவு
லேட்?” - சுகர்  ஃப்ரீயை காபியில் கலக்கியபடியே
வரவேற்றாள் சிமி.

    “தினம் நான் கேட்ட கேள்விய இன்னிக்கு நீ ரிப்பீட்
பண்றியா?”

    “அஃப்கோர்ஸ்!  அதென்ன கையில்.. பேபி டாலர்..”
வெடுக்கென பிடுங்கிப் பார்த்தாள் சிமி.

    “யெஸ்.  கடையில பார்த்தேன்.  ரொம்ப
அழகாயிருந்துச்சு.  பார்த்த உடனே நமக்கு பொறக்க
போற குழந்தைக்குனு வாங்கிட்டு வந்துட்டேன். 
அப்புறம் சிமி.. குழந்தை வேணாம்னு தள்ளி வெச்சதெல்லாம்
போதும்.  இந்த வாரம் கைனகாலஜிஸ்ட்கிட்ட
ஃபார்மாலிட்டிக்கு ஒரு செக்-அப் பண்ணிட்டு வந்துடலாம்.”

“எதுக்கு?”

“நீ சொன்ன அந்த ரெண்டு வருஷம் போன மாசத்தோட
 முடிஞ்சிடுச்சு.. ஞாபகம் இல்லையா?”

“ஆமா.. இப்ப ரொம்ப முக்கியம்!”

“என்ன உளர்ற..”

     “நான் ஸ்டிரெய்ட்டாவே வரேன் அசோக்.  எனக்கு
 இந்த குழந்தை பெத்துக்கறதுல எல்லாம் இஷ்டம் இல்லை.”

“வா..ட்?”

“யெஸ்..  என்னோட கரியரையும் நான் பாக்கணுமில்ல..”

   “என்ன சுமி இது?  மாடலிங் பண்றவங்க யாரும் குழந்தை
 பெத்துக்கறதில்லையா?  அப்ப நமக்குக் குழந்தையே
 வேண்டாமா?”

       “இந்த உடம்பை ஸ்லிம்மா வச்சுக்க நான் எவ்வளவு
கஷ்டப்படுறேன்னு எனக்குத்தான் தெரியும்.  குழந்தைக்கு
வேற ஐடியா வச்சிருக்கேன்”

“என்ன ஐடியா?”

     “ம்..  ஒரு வாடகைத் தாய் மூலமா நம்ம குழந்தைய
பெத்துக்க போறேன்.”

“சிமி..  ஆர் யூ  மேட்?” - ஏழு கட்டையில் கத்தினான் அசோக்.

    “இப்ப எதுக்குக் கத்தறே..?  ஜஸ்ட் பி கொய்ட்! 
அடுத்து வர்ற 5 வருஷமும் என்னோட வாழ்க்கையில்
கோல்டன் இயர்ஸ்.  நான் இப்பதான் வளர்ந்துட்டு வர்றேன்.
கொஞ்சம் கேப் விட்டாலும் என் கரியரே ஜீரோ ஆயிடும்.
இந்த நேரத்துல என்னால வயித்த முன்னாடி தள்ளிக்கிட்டு
நின்னுட்டிருக்க முடியாது.  இந்த வாடகைத் தாய் ஏற்பாடு
கூட, நீ குழந்தை குழந்தைனு அலையறதாலதான்.
இல்லைன்னா எனக்கு குழந்தை பெத்துக்கற ஐடியாவே
இல்லை!”

“ஓ.. ஹைட்ரஜன் + ஆக்ஸிஜன் = வாட்டர்னு சொல்ற மாதிரி,
ஆண் + பெண் = குழந்தைனு சயின்ஸ்ல எனக்கு கணக்கு
 காட்டுறியா?”

ஆவேசமாய்ப் பேசி சற்று ஆசுவாசித்தவன்..

        “ஓ.கே சிமி..  என்ன ஆச்சு உனக்கு?  உன் மனசைத்
தொட்டுச் சொல்லு.. ஒரு குழந்தையப் பெத்துக்கணும்னு
உனக்கு ஒரு பர்சன்ட் கூட ஆசையில்ல?”

       “இல்ல, இல்ல, இல்லவே இல்ல.  லைஃப்ல எனக்கு
ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ் இருக்கு.  இப்ப அதுதான் முக்கியம்.
உன்னையே எடுத்துக்கயேன்..  சில நிர்ப்பந்தத்துக்காக உன்
வேலையை விடுன்னா விடுவியா?  ஆம்பளைக்கு ஒரு நியாயம்..
பொம்பளைக்கு ஒரு நியாயமா?”

        “சிமி, இது நியாயம் அநியாயம் பாக்குற விஷயமில்ல.
இது தாய்மை.  உள்ளன்போட அனுபவிச்சு ரசிக்கிற விஷயம்.
இதே ஆண்களாலும் குழந்தை பெத்துக்க முடியும்னா,
குழந்தைக்காக வேலையை விட நான் ரெடி!”

       “போகாத ஊருக்கு நீ வழி சொல்லாத.. ஏற்கனவே
பல தடவ குழந்தை வேண்டாம்னு நான் மறைமுகமா
சொல்லியிருக்கேன்.  இதுதான் என்னோட முடிவு. 
இதுக்கு இஷ்டமிருந்தாநாம சேர்ந்து வாழலாம்.
இல்லேன்னா டிவோர்ஸ்தான் ஒரே வழி!”

    “சிமி, இது ரொம்ப ஓவர்.  நீ என்னை பல தடவ இன்சல்ட்
பண்ணியிருக்கே.  ஆனா, நான் எதையும் பெருசா எடுத்துக்
கிட்டதில்லை.  ஏன்னா நீயே எனக்குக் குழந்தை மாதிரிதான்.
உன் குறும்புத்தனத்தை எல்லாம் குழந்தை சேட்டையா
ரசிச்சிருக்கேன்.  உன்னை 100% லவ் பண்ணி கல்யாணம்
பண்ணிக்கிட்டேன்.  அதுக்காவது மரியாதை கொடு.  இன்னும்
ஒரு வருஷம் வேணா வெயிட் பண்றேன்.  எனக்கு நல்ல பதிலா
சொல்லு!”

    “டோண்ட் பீ சில்லி, பீ பிராக்டிகல்.  நீதான் லவ் லவ்னு என்
முன்னாடி வந்து விழுந்தே.  அப்பவே, நாம ‘லிவிங் டுகெதரா’
இருக்கலாம்னு தான் நான் சொன்னேன்.  உன் பேரண்ட்ஸ்க்காக
நீ ஓவரா கம்ப்பெல் பண்ணதால தான் நான் கல்யாணத்துக்கே
சம்மதிச்சேன்.  ஆனா இந்த விஷயத்துல நான் காம்ப்ரமைஸ்
பண்ணிக்கறதா இல்ல.  உன்னை மாதிரி குழந்தை குழந்தைனு
அலையிற ஆசாமி கூட இன்னும் 30 வருஷம் ஒண்ணா வாழ
முடியும்னு எனக்குத் தோணல.  ஸோ..  இங்கயே கட்
பண்ணிக்கலாம்.  அட்வகேட்டை கன்சல்ட் பண்ணி நோட்டீஸ்
அனுப்புறேன்.  ஸைன் பண்ணிடு.  அதுக்கப்புறம் நீ சந்தோஷமா
வேற லைஃப் ஸ்டார்ட் பண்ணிக்கோ.  நான் குறுக்க வர
மாட்டேன்.  ஜஸ்ட், லீவ் மீ அலோன்.”

      அலட்டிக் கொள்ளாமல் டைவர்ஸ் வரை பேசிவிட்டுச்
 செல்பவளை கண் இமைக்கவும் மறந்து வெறித்தான் அசோக்.

     யிற்று!  விவாகரத்தும் ஆகி இரண்டு வருடங்கள்
உருண்டோடிப்போனது.  திருமண நாளை காலண்டரில்
பார்த்ததும் பழையநினைவுகள் கண் முன் சில நேரம்
நிழலாடும் அசோக்குக்கு!

     இருவரும்  பிரிந்தது முதல் தொலைத் தொடர்புக்கு
வெளியிலேயே இருந்தனர்.  தொலைக்காட்சியில் அவள்
தலைகாட்டும் விளம்பரங்களைப் பார்க்கையில் ஏற்படும்
வெறுமை மனதினுள் சில அதிர்வுகளை உண்டு செய்வதோடு
நின்று போனது அவனுக்கும்.

     வழக்கம்போல் நாளிதழை மேய்ந்தவனின் கண்கள் நிலை
குத்தி நின்றது அந்தக் ‘கண்ணீர் அஞ்சலி’ புகைப்படத்தைப்
பார்த்து.  சிமியை ஒரே மகளாகக் கொண்ட அந்த ராணுவ
அதிகாரி காலமாகியிருந்தார்.  ஏற்கனவே சிறு வயதிலேயே
தாயை இழந்து விட்டிருந்தவள் சிமி.  போகலாமா வேண்டாமா
என ஒரே மனப்போராட்டம் அவனுள்.  போனால் அவளைப்
பார்க்க வேண்டி வரும் என்று தவிர்த்தே விட்டான்.  23 நாட்கள்
கழித்து, அவனுள் எழுந்த குற்ற உணர்வு அவள் வீடு இருந்த
திசை நோக்கி அவன் டூவீலரைத் திருப்பி விட்டிருந்தது.

     மெல்லிய பூப் போட்ட காட்டன் நைட்டியில் சோபாவின்
மேல் சரிந்திருந்தாள்.  அவனுள் ஒரு தயக்கம் உள்ளூர அப்பிக்
 கிடந்தது.  தொண்டையை செருமிச் சரி செய்தான்.

“சிமி.. சிமி..”

    மெல்ல தலையைத் திருப்பியவள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாள்.
 இருக்கையைக் கைகாட்ட..  அமர்ந்தான் அவன்.

     பார்வை சந்திப்புகள் தாங்க இயலவில்லை இருவருக்கும்.
இருவருமே தவிர்த்தனர்.

“ஐ’ம் ஸாரி.  அப்பா எப்படி இறந்தார்?”

   
     அவள் கண்களிலிருந்து வந்த நீர் ஒரு கோடாய்
கன்னங்களைப் பிரித்தது.

     “ஹார்ட் அட்டாக்.  எனக்கு தைரியம் சொன்னவரு இப்ப
திடீர்னு போயிட்டார்” வருத்தம் தெரிவித்து பரஸ்பர
ஆறுதல் சொல்லி கிளம்ப எழுந்தான்.

     “அஷோக், பை தி பை உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்.
உங்க லைஃபை கொஞ்ச நாள் நான் ஸ்பாயில் பண்ணதுக்கு
கடவுள் என்னை ரொம்ப தண்டிச்சிட்டார்.”

      அவளுக்குப் பேச இயலாமல் மார்பு பொருமியது.
கர்ப்பப் பையில் ஏற்பட்ட புற்றுநோயால், அவள் உயிர்
காக்க கர்ப்பப் பையையே எடுத்து விட்டதை நெஞ்சு
விடைக்கக் கூறி முடித்தாள்.  அதிர்ச்சி விலகாமல்
நின்றிருந்தான் அசோக்.

    “உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு தோணுச்சி,
கேட்டுட்டேன்.  இனி நான் நிம்மதியா தூங்குவேன் அசோக்.”

     “….”

    “யு நோ ஒன்திங்..  நீ சொன்னப்ப அந்த அருமை தெரியல.
என்னோட ‘யூட்ரஸை’ எடுத்துட்டதுக்கு அப்புறம்தான்
குழந்தை பெத்துக்கணும்னு ஆசை.. இல்ல பேராசையே
வந்துடுச்சு.

     குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்கமா
போயிடுது.எனக்கு இது வேணும்..  இல்ல அஷோக்?
முக்கியமா உனக்கு பொண்ணு பொறந்தா தப்பித் தவறி
என் பேரை எதுவும் வெச்சிடாதே.  என் ஞாபகம் உனக்கு
எப்பவுமே வேணாம்!

     பை தி பை, உனக்கு குழந்தை பொறந்துடுச்சா? 
இப்ப எத்தனை மாசம்?”

“ஒரு குழந்தை இருக்கு.  25 வயசு.  பேரு சிமி!”



 நன்றி:தேவதை

Thursday, December 23, 2010

கொஞ்சம் யோசியுங்க....




    சமீபத்தில் தொலைதூரக் கல்வியில் தேர்வு
எழுதினேன்.பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான
பி.எட். தேர்வுகளும் உடன் நடைபெற்றது.எனக்குப்
பக்கத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசிரியை
தேர்வு எழுதினார்.

    அவர் நிறைய ‘பிட்’ பேப்பர்களை எடுத்து வந்து
சர்வசாதாரணமாய் காப்பி அடித்தார்.மேலும் வெளியில்
சென்று தன் தோழியான மற்றொரு ஆசிரியையுடன்
காப்பி அடித்த வரலாறை விரிவாக விளக்கினார்.அந்த
தோழியும் தன் ‘பிட்’அனுபவத்தை பகிர்ந்துக்
கொண்டிருந்தார்.எனக்கோ பெரும் அதிர்ச்சி.

   மாணவர்கள் காப்பி அடித்தால் அதைத் திருத்தி
சிறந்த பண்புகளின் மூலம் நல்வழிப்படுத்த வேண்டிய
ஒரு ஆசிரியர் இவ்வாறு இருக்கிறாரே என மனம்
வெதும்பியது.எதிர்கால இந்தியாவை வலுவாக்க தோள்
கொடுக்கும் ஆசிரிய பணி எவ்வளவு சிறந்தது?.அவ்வாறு
இருந்து இப்படிப்பட்ட செயல் செய்வது  வெட்கப்பட
வேண்டிய விஷயமாக எனக்குப் படுகிறது.உங்களுக்கு?

Tuesday, December 21, 2010

செல் போய் செல் வந்துச்சு டும் டும் டும் டும்

    ஒரு தரம் சீமந்த விழாவிற்காக ஆரணியிலிருந்து
வேலூருக்கு புறப்பட வேண்டி பேருந்து நிலையத்தில்
காத்திருந்தோம்.முகூர்த்த நாள் என்பதால் பயங்கர
கூட்டம்.

   வேலூர் வண்டி வரும் சத்தம் கேட்டு ஒரு கூட்டமே
முண்டியடித்து ஓடியது.என் கணவரும் இடம் பிடிக்க
வேண்டி ஓடினார்.இடம் பிடித்து ஏறி உட்கார்ந்ததும்
தான்செல்போன் இருக்கிறதா என சரிபார்த்தார்.
செல்போனை காணவில்லை.பெரும் பொக்கிஷத்தை
இழந்து விட்டதுபோல் முகம் வாடி விட்டது அவருக்கு.

     உடனே என்னுடைய செல்லில் இருந்து அவர்
நம்பருக்கு போன் போட்டார்.பேருந்தில் யாரெனும்
வைத்திருந்தாலும்கண்டுபிடித்துவிடலாம் என எண்ணி.
ரிங் போய் கொண்டேஇருந்தது.யாரும் எடுக்கவில்லை.
பேருந்தினுன் ‘ நொய்நொய்’ என இரைச்சல்
இருந்ததே தவிர அவரின்ரிங்டோன் ஓசை இல்லை.
பேருந்திற்கு வெளியே யாரேனும் வைத்துள்ளனரா என
ரிங் போட்டபடியே பேருந்தை விட்டு இறங்கி
கவனித்தார்.அப்பொழுதும் சத்தம் கேட்கவில்லை.

      நாங்கள் தேடுவது அறிந்து சக பயணிகளும்
பரபரப்பானார்கள்.’ நேற்று கூட ஒரு செல்போன்
திருடி5 செல்லுடன் அகப்பட்டாள்’ எனச் சொல்லி
என் வயிற்றில் அமிலத்தை கரைத்தார்.டிரைவர் வந்து
வண்டியில் அமர்ந்துவிட்டார்.போனது போனது தான்
என எண்ணி இவரும் பேருந்தில் ஏறிக் கொண்டார்.

       இங்கே தான் எங்கோ இருக்கிறது என்பதாய்
உள்ளுணர்வுஎனக்குள் தவிப்பாய் மாற’வேண்டுமானால்
வண்டியை விட்டு இறங்கி இன்னும் சற்று நேரம் பார்த்து
விட்டு செல்லலாமே’என கூறிக்கொண்டிருந்தேன்.

     ஆனால் அவரோ,கண்ணை மூடி சில் வினாடிகள்
அப்படியே தியானத்தில் அமர்ந்துவிட்டார்.பேருந்து
மெல்லஆடி அசைய புறப்பட எத்தனித்தது.திடீரென
சாமி வந்தவராக‘இரு வரேன்’ என்றபடி எழுந்து ஓடினார்.

      வண்டி கிளம்ப,இருப்பதா இறங்குவதா என
தெரியாமல் நான்.போர்டில் தொங்கியபடி வண்டியை
பிடித்தவர்’கிடைச்சிடுச்சி’என வாயெல்லாம் பல்லாக
செல்போனை கைகளில் உயரேதூக்கிக் காட்டினார்.
எங்களுடைய  மகிழ்ச்சியையும் மீறி சக பயணிகள்
தான் அதிகம் சந்தோஷித்தனர்.

     பஸ் பிடிக்க வேண்டி எதிர்புறம் இருந்த
கால்வாயைஎகிறி குதித்து கடக்கையில் பக்கவாட்டில்
 இருந்த குப்பைமேட்டில்அவரின் செல்போன் விழுந்து
விட்டிருக்கிறது.குப்பையின் மேல்கிடக்கவே யாரும்
கவனிக்கக் காணோம்.

  ‘நீங்க ஏதோ நல்லது செஞ்சிருக்கீங்க சார்,அதான்
உங்க பொருள் திரும்ப பத்திரமா கிடைச்சிடுச்சி’ என
நல்லவார்த்தை சொல்லி வழ்த்தினார் ஒரு பயணி.
ஒரு ஆசிர்வாதம் போல் மனம்நிறைந்தது எங்களுக்கு.

       ஒரு தரம் தன் கடையின் எதிரில் அனாதையாய்
கிடந்த செல்லை அதிலிருந்த ஒரு நம்பரில் பேசி
சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்த நிகழ்வை பயணத்தில்
என்னிடம் பகிர்ந்து கொண்டே வந்தார்.அதோடும்
இதோடும் முடிச்சு போட்டு பார்த்து சிலிர்த்தேன் நான்.

Sunday, December 19, 2010

திருவண்ணாமலை தீபம்

       இந்த வருடம் [2010] கார்த்திகை தீபதிரு
நாளில் மாலை 5.30 மணிக்கெல்லாம் விளக்கு
ஏற்ற ஆயத்தமாகிக் கொண்டு இருந்தேன்.என் பெரிய
மகள் ஒவ்வொரு அகலுக்கும் திரி போட்டுக்
கொண்டிருந்தாள்.

     நான் விளக்குகளில் நெருப்பு ஏற்றிக் கொடுக்க
அவள் எங்கள் வீட்டு படியிலும் பக்கவாட்டு சுவரிலும்
வரிசையாக அடுக்கினாள்.அதற்குள்,திருவண்ணாமலை
தீபம் டி.வி.யில் ஒளிப்பரப்பாகவே 'சீக்கிரம்  வா
பார்த்து விட்டு வரலாம்' என நான் அவசரப்படுத்தினேன்.

    “ஓ...இன்னிக்கு தி.மலை தீபமா?” என்றாள்.

    “பின் மகாதீபம் இல்லாமல் வேறென்ன?
அதனால் தான் எல்லோர் வீட்டிலும் தீபம் ஏற்றுகிறோம்”
என்றேன் விளக்கத் தோரணையில்.

    “அப்போ அந்த தீபம் என்னிக்கு மம்மி”-
மறுபடியும் அவள்.
     
     “எந்த தீபம்?”

    “அதான் ஒரு ஆம்பளை இருந்தா 5 விளக்கு,
2 ஆம்பளை இருந்தா 10 விளக்குனு நடுத்தெருவுல
ஏத்துவாங்களே...அப்புறம் தேங்காவுல திரி போட்டு
அரிசி மேலே ஏத்துவாங்களே அதெல்லாம் எப்ப வரும்”
என அப்பாவியாக கேட்டாள்.

    அவள் கேட்டதற்கும் டி.வி.யில் தீபம் ஏற்றுவதற்கும்
சரியாக இருந்தது.அரோகரா என சொல்லக் கூட
இயலாமல் வயிற்றை பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தேன்.
நான் இப்படி சிரிப்பதை பார்த்து என் இரு மகள்களும்
சிரிப்பு ஜோதியில் ஐக்கியமாயினர்.

    விளக்கேற்றும் வேளையில் யாரும் அழக்கூடாது
என்பார்கள்.நல்ல வேளை நாங்கள் விழுந்து விழுந்து
சிரித்துக் கொண்டு தான் இருந்தோம்.

    பிறகு யோசித்தேன்.வதந்திகளுக்கு பிறகான
செயல்களெல்லாம் பிள்ளைகளின் மனதில்
கூட எப்படி ஊடுருவி வேர் பரப்பி இருக்கின்றன என்று.

    தன்னுடைய கேள்விக்கு அப்படி என்ன தான் ‘பவர்’
என தெரியாமலே என்னை பார்த்து உற்சாகமாகி விட்டாள்
என் மூத்த மகள்.

Saturday, December 18, 2010

கசப்பு



               ரேகாவின் முகத்தில் ஈயாடவில்லை.
ரங்கசாமி தொடர்ந்தார்,”பாரும்மா... நான் அதிகமா
கேக்கல.வேலைக்குச் சேர்ந்தா கொடுத்ததுக்கு மேலே
சம்பாதிச்சுடப்போறே...”
        
             ” சார், எங்கப்பா வேலையத்தான் கேக்குறேன்.
நீங்க கேட்ட எல்லா சான்றிதழும் இருக்கு. நீங்க
கையெழுத்துப் போட்டு அனுப்பிச்சா,வேலை முடிஞ்சா
மாதிரி. ப்ளீஸ்... எங்களால அவ்வளவு பெரிய தொகைய
 புரட்ட  முடியாதுங்க.”

             “அப்படியா... சரி,வேலை வரவேண்டிய நேரத்துல
வரும். நீ போகலாம்........”தொண்டைக்குழி அடைக்க,
பேச இயலாமல் வெளியேறினாள் ரேகா.

               ரங்கசாமிக்கு,இரவு திருமண விருந்தில் அளவுக்
கதிகமாக உண்டதில் அஜீரணத்தில் மாரடைப்பது போல்
உணர்வு. ஒரு கணம், ’ஹார்ட்  அட்டாக் ’வந்து பலர் மாலை
 போடுவது போல் ஒரு பிரமை.

             தூங்கிக் கொண்டிருந்த 10வது படிக்கும் மகளையும்
மனைவியையும் பார்த்தார். ஏனோ, ரேகாவின் ஞாபகம்
வந்து வந்து போனது.தான் இறந்து தன் மகளோ மனைவியோ
இப்படி கண்கலங்கி இன்னொரு மேஜை எதிரே நிற்பதாக
மனதில் நிழலாடியது.

             எண்ணங்களினூடே  எப்படியோ தூங்கிப் போனார்.
அன்றைய பொழுது ரேகாவிற்குமாக சேர்ந்தே விடிந்தது.


 நன்றி:குமுதம்  

வசந்தத்தை பரிசளிப்போம்



காலை எழுந்தவுடன் படிப்பு
மாலை முழுவதும் விலையாட்டு.......
               அற்புதமாகப் பாடியிருக்கிறார் மகாகவி பாரதி.
ஆனால்,இன்று எத்தனை பொற்றோர்கள் பிள்ளைகளை
ஆடி,ஒடி விளையாட அனுமதிக்கின்றனர்?

       பள்ளி விட்டு வந்ததும் அந்த கிளாஸ்,இந்த கிளாஸ்,
டியூஷன்  என்று ஒரு நிமிடம் கூட பிள்ளைகளை சும்மா
இருக்க விடுவதில்லை.பள்ளிகளில் கேட்கவே வேண்டாம்
பி.டி ,பீரியடைக்கூட  விடாமல் கிளாஸ் எடுப்பார்கள்.

      இன்று நிறைய குழந்தைகள் மன அழுத்த பிரச்சனையில்
சிக்கி தாங்களும் தவித்து பெற்றோரையும் பரிதவிக்க
வைக்கும் திணறலுக்குக் காரணமே, ”விளையாட்டுகளை
ஒரம்கட்டியுள்ள தவறுதான்.”

       உடற்பயிற்சி,திட்டமிடல்,பலத்தைப் பயன்படுத்துதல்,
ஒற்றுமையைப் பேணுதல்,திறமையை நிரூபித்தல் என
பன் முகங்களைகொண்ட்து விளையாட்டு.

      இது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை வாரி
வழங்கும் கற்பக விருட்சம் நம் பிள்ளைகளுக்கு கோலி,
பச்சகுதிரை, சடுகுடு,கண்ணாமூச்சி போன்ற விளை
யாட்டுகள்ளொல்லாம் தெரியுமா?

      மனதிற்கும் உடலுக்கும்பாதிப்பை ஏற்படுத்தும்
கம்ப்யூட்டர், கேம்ஸ்களும் தான் அவர்களின் உலகமா.
நன்கு ஓடுவதல் உடல்பலம், கூடிபேசுவதால் மொழிப்
பயிற்ச்சி, கேள்விக்கு பதில் சொல்கையில் கற்ப்பனெய்
வளர்ச்சி, பொதுவான ஆர்வம்,குழுவாய் பிரிகையில்
நல்லிணக்கம்...இப்படி,வளர் இளம் பருவத்தை
ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் விளையட்டுக்களை
அலட்சியபடுத்தலமா?

       பிள்ளைகள் சோர்ந்து போகாமல் இருக்கவும்,அடுத்த
வாரத்திற்கான புத்துணர்ச்சியை ரீச்சாஜ் செய்வதர்குமே
வார இறுதியில் விடுமுறை தினங்களிலாவது குழந்தைகளை
நன்கு விளையாட அனுமதியுங்கள்.

      வீடியோகேம்ஸ்களும் ,டி.வி.சேனல்களும்,போட்டிகள்
நிறைந்த படிப்பும், உலகமும் நம் குழந்தைகளின்
விளையாடும் நேரத்தை தின்று ஏப்பம் விட்டுள்ளன.இதை
விளையாட்டாக எண்ணாமல் நம் குழந்தைகளுக்கு
ஆரோக்கியமான விளையாட்டுகளை அறிமுகம் செய்வோம்.
வாழ்கையின் வசந்தமான பக்கங்களைப் பரிசளிப்போம்.


நன்றி; தினமலர்-பென்கள் மலர்

மரணம்

பிணவறை ஊழியரின்
அன்றாட வாழ்க்கையே
மரணமாய் போனது.

பயம்

ஆயிரம் பிரசவங்கள்
பார்த்த கிருஷ்ணவேணி
பாட்டிக்கும்  மரணம்
குறித்த பயம்
வராமல் இல்லை.

கல்வெட்டு

சோழர் காலத்து கல்வெட்டு
போலவே புரிபடாமல் உள்ளது
மழலையர் வகுப்பில் பயிலும்
என் மகளின் எழுத்துக்கள்.

தவறு

தப்பும் தவறுமாக பாடிய
மகளை திருத்த விழைந்து
கடித்துக் கொண்டேன்  நாவை
வார்த்தைகள் மாறிய இவளின்
திரைப்பாடலே மேல் என்று.

வெட்கக் கணங்கள்!

அடர்ந்த வேலையினூடே
வலித்த தோள்பட்டையை
தடவி விடுகையில் நேர்ந்த
வெட்கக் கணங்கள்
உனக்கும் எனக்குமான
நேற்றைய தருணத்தை
ஞாபகப்படுத்தியது பூஜையறையில்!

 நன்றி : தினமலர்-பெண்கள் மலர்.

ஆல்பம்

எதிர்த்த வீட்டு
குடித்தன பெண்ணின்
திருமண ஆல்பத்தை
கண்கொள்ளாமல் பார்த்து
விம்முகையில்  ‘ஏம்மா
அழறே’ன்னு கேட்ட
மகனிடம் எப்படிச் சொல்வேன்....
ஓடிப் போய் கட்டிக்
கொண்ட என்
கல்யாண வைபவத்தை.


 நன்றி:தேவதை

உறைத்த வயது!

 நரைமுடி சில
கண்ணில் பட்டும்
உணரவில்லை..
‘உன் எச்சில்
வேணாம் மம்மி’
என நீ
உரைத்த போதுதான்
உரைத்தது.


 நன்றி :அவள் விகடன்

அம்மாவின் பாடல்

ஓடும் மிக்ஸி அரவையிலும்
மின் மோட்டார் சத்ததிலும்
பாடிக் கொள்வாள் அம்மா
கழுதை வருகிறது என
சொல்லும் அப்பாவுக்கு பயந்து.  


 நன்றி :கல்கி                      

Friday, December 17, 2010

மாற்றம்


   நேத்து காலையில ரிப்பேரான டி.வி.இன்னும் சரி
செய்யல. எல்லா சீரியலும் போச்சு. யார்கிட்ட போய்
கதையகேக்கறது? சுமதி சிடுசிடுத்தாள்.குழந்தைகளும்
அப்பாவை வெறுப்புடன் பார்த்தனர்.
 
    வேறு வழியில்லாமல் கேரம் போர்டு விளையாடினார்கள்.
விளையாட்டு சுவாரஸ்யத்தில்,டி.வி.மறந்துபோனது.சிரித்துச்
சிரித்துப் பேசி கன்னமும் வாயும் வலியெடுத்துக் கொண்டது

     சுமதியின் மனது மெல்ல யோசித்தது. எத்தனை நாளா
யிற்று, இப்படி குடும்பமே சிரித்து ...டி.வி.யில நாடகங்களைத்
தவற விட்டோம்னு வருத்தப்பட்டோமே, இத்தனை நாளும்
இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தவற விட்டிருக்கோம்.
எவ்வளவு பெரிய இழப்பு?

     எத்தனை மகிழ்ச்சியான தருணங்களைத் தவற
விட்டிருக்கோம்.... அந்த நேரத்தில் காலிங் பெல் அடித்தது.
கதவைத்திறந்தாள்.
     “ நான் டி.வி.மெக்கானிக் சரவணன். ஐயா வரச்சொன்னாரு...
      “ஓ...வந்து...சாரி, நான் அவசரமா வெளியூர் போறேன்.
அடுத்தவாரம் வர்றீங்களா ப்ளீஸ்...
     “சரிம்மா...
     எப்படியும் ரிப்பேரான டி.வி.யை சரி செய்யத்தான் போறோம்.
ஒரு வாரமாவது இந்த சந்தோஷம் நீடிக்கட்டுமே என அவள்
மனம் ஏங்கியது. 


 நன்றி:குமுதம்
      

Thursday, December 16, 2010

அவளும் பெண்தானே


     பெண்கள் இன்று பல துறைகளில்,பல சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கின்றனர்.இது எவ்வளவு வரவேற்கப்படவேண்டிய விஷயம்! ஆனால் இன்றும் தவிர்க்கப்படவேண்டிய பல விஷயங்களுக்கு புகைமூட்டி தூபம் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.
ஆண்களிடமிருந்து பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று இன்று வாய்கிழிய பேசுகிறோம். ஆனால் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற ரீதியில் நம் நாட்டில் கணவனை இழந்த பெண்களுக்கு நடத்தும் பல சடங்குகள் மிக மிக கொடுமை.
கணவனை இழந்த பெண் அழுது,பரிதவித்துப் போயிருப்பாள்.கணவனின் சடலத்தை எடுக்கும் நேரத்தில் சடலத்தின் எதிரில் அவளை உட்கார வைத்து தலைக்கு ஊற்றி மஞ்சள்,குங்குமம்,பூ வைத்து அவளை அலங்கரிக்கிறேன் என்று அலைகழிக்கிறார்கள்.
70 வயதான ஒரு பெண்ணுக்கு கணவன் இறந்த அன்று தலையில் தண்ணீர் ஊற்றியதால்,மயங்கிய அவர் 3 நாட்களுக்கு பின்தான் நினைவு திரும்பினார்.சொந்த பந்தங்கள் இதை வேடிக்கை பார்க்கின்றனரே அன்றி,யாரும் தடுக்க முன்வருவதில்லை.அப்படியே யாராவது வேண்டாம் என்று சொன்னாலும் சில வயதான பெண்கள் அதை காதில் வாங்குவதுமில்லை.
வழிவழியாக வந்த சடங்கை யாரும் மீறக்கூடாது. நாங்களெல்லாம் இதுபோன்ற சடங்குகளுக்கு கட்டுப்படவில்லையா? இதுபோன்ற கஷ்டங்களை நாங்கள் படவில்லையா என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது. அவர்கள் வேதனைப்பட்டது உண்மைதான்.ஆனால் அதேபோன்ற மனவேதனையை இன்னோரு பெண் அனுபவிக்கக் கூடாது என்றல்லவா நினைக்க வேண்டும்?
அதன்பிறகு விதவைக்கோலம் பூணும் சடங்கு இன்னும் கொடுமையானது. பிறந்ததிலிருந்தே ஆசையாய் வைத்துக்கொண்டிருந்த பூவுக்கும் பொட்டுக்கும் கணவனை அடையாளமாக சொன்னது யார்? கணவன் கட்டிய தாலி என்பதால், அதை தூக்கி எறிய வேண்டுமா? நேற்றுவரை சூட்டி அழகுப் பார்த்த பூவையும்,பொட்டையும் இனி தன் வாழ்நாள் முழுவதும் சூட்ட அருகதையற்றவள் என்பதை ஒரு பெண்ணால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? இதனால் தான் பல இளம் விதவைப் பெண்களுக்கு மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது.சமுதாயத்தில் எந்த ஆணும் இது போன்ற சடங்குகளை செய்யச்சொல்லி நிர்பந்திப்பதில்லை.இது போன்ற சடங்கு என்ற பெயரில் பெண்களின் சந்தோஷத்தை பறிப்பது சக பெண்கள்தான்.மற்ற பெண்களுக்கு இது போன்ற சடங்கு நடக்கும் போது பதைக்காத மனது தனக்கோ,தன்னுடைய உறவுகளுக்கு நடக்கும் போது மட்டும் ஏன் பதைக்கிறது?அதை தடுக்க துடிக்கிறது?இது போன்ற சமுதாய பிரச்னைகளுக்கு 4 பேர் பேசி தீர்வு காணமுடியாது.
ஆயிரக்கணக்கான இதயங்களில் இருக்கும் இந்த கேள்விக்கு ஒன்று கூடிதான் பதில் தேட வேண்டும். விடியலை உருவாக்க வேண்டும்.சில கேடுகளை களைய போரிட்த்தான் வேண்டுமென்றால், போரிடுவதில் தவறில்லை.பழமொழிகளை கடைப்பிடிக்ககூடாது என்று சொல்லவில்லை.காலத்துக்கும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைத்தான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்குஎன்று எந்த சான்றோரும் சொல்லவில்லை.ஆனால் அது முறியடிக்கவேண்டிய பிரச்சனை என்று முறியடிக்கவில்லையா?என்னுடைய உறவினர் ஒருவர் சாகும் தருவாயில் தன் மனைவியிடம்,` நான் இறந்த பிறகு நீ கண்டிப்பாக பூ சூடிக்கொள்ள வேண்டும்,பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும்,தாலியை கழட்டக்கூடாது`என்று சொன்னார்.அவர் இறந்த பிறகு அந்த பெண்ணின் தாயாரும்,மாமியாரும் அவளை அவள் கணவர் சொன்னது போன்று வாழவிடவில்லை.இது போன்ற வீணான சடங்குகளினால் பெண்களின் மனது சோர்வடைவதோடு, தன்னம்பிக்கையையும் இழக்கின்றனர் என்பதை அனைவரும் அறியவேண்டும்.
பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு பெண்களே சேர்ந்து தான் தீர்வு காண வேண்டும்.மனைவியை இழந்த எந்த ஆணும் எந்த சடங்குகளையும், நியதிகளையும் வைத்துக் கொள்வதில்லை.பெண்கள் மட்டும் என்ன இளக்காரமா? இது போன்ற கொடுமைகளுக்கு ஒட்டு மொத்த பெண்களும் மனம் மாறினால் தான் முடிவு பிறக்கும்.பெண்கள் ஒன்றுபட்டால் இந்த கொடிய பழக்கத்திற்கு தீ மூட்டிடலாம்!அழகு என்பது ஆடம்பரம் அல்ல,அதுவும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை அனைவரும் உணர வேண்டும்!

நன்றி:தினமலர்-பெண்கள்மலர்.

தங்கத்தோடு

 மட்டற்ற மகிழ்ச்சி மலையம்மாளுக்கு, கைகளால்
தடவிக் கொடுத்து கண்குளிர ஆசையாய் அந்த தோடையே
பார்த்துக் கொண்டிருந்தாள்.

எலே போதுமடி பார்த்தது. காதுல மாட்டி பாருடி...
ஏன் ஆத்தா? நீ தானே சொல்லுவ, உனக்குத் தங்கத்தோடு
ராசியில்லை தங்கத்தோடு ராசியில்லைன்னு... இப்படியே
சொல்லி இவ்வளவு வயசுல ஒத்த தோட நீ வாங்கிக்
கொடுக்க லயே.. இன்னிக்கு கரி நாள் நாளைக்குத் தான்
நல்ல நேரத்துல போட்டு பார்க்கணும்.

”அடி பாவி மகளே” ராகத்துடன் இழுத்தவள், நான்
என்ன போடாமலா கிடந்தேன். அதுவும் நீ எனக்கு ஒத்த
பொட்டப்புள்ள. காது குத்தையில எங்காத்தா 2 கல்லு
வெச்சு மீன் தோட்டை வச்சிச்சி. அதப் போட்டநாலுல
இருந்து புண்ணா புடிச்சி. சீப் போன்னு விட்டுப்புட்டேன்.
ஹூம்... நீ சமைஞ்சதும் உன் தாய் மாமன் லட்சணமா
மூணு இலை ஒட்டினாப்புல தோட்டை வாங்கி வெச்சான்.
பள்ளிக் கூடத்துக்கு போட்டுன்னு போயி யாரோ துரத்துறான்னு
அலறின்னு வந்தே, மறுபடியும் கழட்டிட்டேன். வெவரம்
தெரிஞ்சதும் போட்டா இரண்டே நாள்ல தொலைச்சுட்டும்
வந்துட்டே..”

’உங்கய்யன் போய் சேர்ந்ததுக்கப்புறம் ஒண்ணு
ஒண்ணா எல்லா நகையும் அடகு கடையில குடி போயிடுச்சி..
மூணு ஜத மூக்குத்தியோட கட்டிக் கொடுத்தேன். அந்த
பாவிப் பய...

”ஆத்தா இப்ப எதுக்கு அதெல்லாம்?”

என் மனசு கேக்கலயே.. படுபாவி.. உன் தங்ககுணத்தப்
பார்க்காம தங்கம் இல்லேன்னு இன்னொரு கல்யாணம் கட்டிக்கினு
வாயும் வயிறுமா இருக்கப்ப வுட்டுட்டு போயிட்டானே...

ஏ! ஆத்தா எத்தனை தடவ சொல்றது என் புள்ள எதிருல
அந்த மனுசன பத்தி பேசாதேன்னு.நீ வாடா ராசா...
”அம்மா, இந்த தோடு யாருக்குமா?”

”எனக்குத் தான் ராசா வாங்கியிருக்கேன். சின்னப்
புள்ளையிலருந்து எனக்கு தங்கத்தோடுன்னா கொள்ளை பிரியம்.
எதுவுமே தங்கல.ஆண்டவன் புண்ணியத்துல அம்மாவே உழைச்சி
சீட்டு சேர்த்து முக்காக் பவுனுல துணிஞ்சி வாங்கிடடேன்
கண்ணு...”

”இத நீ தினமும் போட்டுக்குவியாம்மா...?”
நாளைக்கு மதியம் நல்ல நேரத்துல இந்த தோட்டை
போட்டுக்குவோம். சரியா? இப்ப நம்ம சாப்பிடலாமா...?

கருமேகங்கள் ஊரை வளைத்தாற் போல் சூழ்ந்துக் கொண்டது.
அங்கொன்றும், இங்கொன்றுமாக வானம் தூறலாய் தண்ணீர்
தெளித்துக் கொண்டிருந்தது.

என்ன ஆத்தாளும் மவளும் இம்புட்டு நேரங்கழிச்சி வர்றீங்க?
எப்ப வேலை ஆவுறது?

ஐயா என் மவனுக்கு காய்ச்சல். கஞ்சி காய்ச்சி வச்சிட்டு,
ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வந்தேன். அதான்
நேரம் ஆயிடிச்சி...

சரி... சரி... சீக்கரம் வேலைய ஆரம்பியுங்க.
வானம் வேற வேலையை காண்பிக்குது. ஆளுக்கு ஓரு சுத்திய்
எடுத்து செங்கல்லை துண்டு துண்டாக உடைக்க ஆரம்பித்தார்கள்.
எங்கிருந்தோ வந்த அந்தக் குரல் அனைவரின் ஈரக்குலையையும்
நடுநடுங்க வைத்தது.

எலே... சிறுவாத்து ஏரி ரொம்பி உடைப்பெடுத்து நம்ம
கிராமத்துக்குள்ளாற தண்ணி வருதுல. மேடான எடத்து மேல
ஏறி பொழச்சிக்குங்க... போங்க... சீக்கரம் போங்க...

தேனி கொட்டி விட்டது போல் அலறி ஓட்டமெடுத்தது
பெருங்கூட்டம். அய்யோ... அம்மான்னு வாயிலும்,
வயிற்றிலும் அடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடியது பெண்கள்
கூட்டம்.யாருப்பா பாத்தது... எங்கிட்டு வருதுன்னு கேள்வி
கேட்டு துளைக்குது இன்னொரு கூட்டம். துணிமணி போனா
போகுது... உசுரு போச்சுனான்னு கேள்வியோட ஐந்தாறு
பெருசுங்க தண்டவாள மேட்டை நோக்கி ஓடுதுங்க...

அய்யோ... என் ராசா, காய்ச்சல்னு உன்ன வூட்ல படுக்க
வெச்சிட்டு வந்தேனே... உனக்கு என்ன ஆச்சோன்னு
வாரியடித்துக் கொண்டு ஓடினா மலையம்மா...

சீக்கரம் போய் ராசாவ கூட்டியாடி... ஓடு... அந்த புள்ள
என்ன பண்ணுதோ... தெரியலியே... மாரிலடித்தவாறு
ஒப்பாரி வைத்து மடங்கி உட்காந்தா ஆத்தாக்காரி.

குடிசைக்குள்ள தண்ணி போறத தூரமே பார்த்துட்ட
மலையம்மா, காத்தா மாறி வந்தா, நெஞ்சுக்கூடு பக்...
பக்னு அடிச்சிக்க சலக் சலக்னு தண்ணிக்குள்ள காலை வச்சி
முன்னேறி, மகமாயித் தாயே, ராசாவக் காபாத்துன்னு
முணுமுணுக்குது உதடு. முட்டிக்கால் புடவை நனைய
குடிசைக்குள்ள நுழைஞ்சா ராசாவ காணல...

” ராசா... ராசா... என் கண்ணு” வெள்ளத்தோடு
போட்டி போட்டு வேகமாக கொட்டுது கண்ணீர்.

அம்மா... நான் இங்கிருக்கேன். சத்தம் கேட்டு ஓடி,
சமையலறை திண்ணை மீது ஏறி நின்றிருந்தவனை மாறி,
மாறி முத்தமிட்டாள். எங்கண்ணு வாடா போயிரலாம்.
பிள்ளையை தூக்கிக்கொண்டு வேக, வேகமா, பாதி தூரம்
நடந்து வந்த மலையம்மாளுக்கு, இப்பதான் ஞாபகம் வந்தது
அந்தத் தங்கத்தோடு...

அய்யய்யோ, மேல் அலமாரியில நேத்து வச்சமே...
வெள்ளம் வர்ற வேகத்துல அடிச்சினு போயிடுமே... நான்
என்ன செய்வேன். கொஞ்ச முன்ன ஞாபகம் வரலியே இந்த
சிறுக்கிக்கு.

அந்த பக்கம் ஓடின மணியை மடக்கி,மணியண்ணே...
தண்டவாள மேட்டாண்ட எங்காத்தாக்கிட்ட ராசாவ
ஒப்படைச்சிடுங்கண்ணே...

நீ எங்க தாயி போற?

தோ... வீட்டாண்ட வர போயிட்டு வந்துடுறேண்ணே.
அந்த பக்கம் இடுப்பு வர வெள்ளம் வந்துருச்சும்மா,
எங்கபோகக் போற?

இதோ... வந்துடுவேண்ணே...

அம்மா... சீக்கரம் வந்துடும்மா... கையைப் பிடித்து
இழுத்தான் ராசா.

வந்துடுறேன் கண்ணு. நீ ஜாக்கிரதையா போ செல்லம்.
இடுப்பு வரை வந்துவிட்ட தண்ணீரில் தத்தளித்து குடிசையை
அடைந்து, கையில் தோடு அடங்கிய அந்த சிறு பெட்டியை
ஏந்தி, தட்டுத்தடுமாறி விரைந்தாள். மொத்த கூட்டமும்
மேட்டுக்கு ஓடி விட ஒத்த பொம்பளையாய் துணியை
ஒண்டியபடியே நடந்தாள்.

எங்கிருந்து தான் வெள்ளம் வந்ததோ அப்படியொரு வெள்ளம்.
சிறுவாத்து ஏரியின் மற்றொருபுறம் உடைப்பெடுக்க பெரும்
சத்தத்தோடு வெள்ளம் சீறிப் பாய்ந்தது. சத்தம் கேட்டு
திரும்பியவள், வெள்ளத்தைப் பார்த்து அலறி ஆத்தா என
கூவியபடி நிலை தடுமாறினாள். தன் அகோரப் பசிக்கு செந்நிற
நாக்கை நீட்டி மலையம்மாளை சுருட்டிக் கொண்டது வெள்ளம்.

ஒதுங்கிய மலையம்மாவின் சடலத்தின் கைகளில் அந்த சிறிய
தங்கத்தோடு பெட்டியை கண்டு ஆற்றாமல் வயிற்றிலும்,
வாயிலும், அடித்து அரற்றினாள் ஆத்தாக்காரி.

இப்பவும் அந்த தோடு உனக்கு ராசியில்லாமலேயே
போயிடுச்சேடி பாவி மகளே... தோடு தோடுன்னு உசுற
வெச்சு இன்னிக்கு உன் உசுரயே கொடுத்துட்டு நிக்குறியே...
இந்தப் பச்சபுள்ளைக்கு நான் என்னா பதில் சொல்லுவேன்.
ஊரே வாய் பொத்தி, கசிந்துக் கொண்டிருக்க, வெறித்து
பார்த்துக் கொண்டிருந்த ராசா, மலையம்மாளின் உயிரற்ற
காதுக்கு அந்த தங்கத் தோடை மாட்டிவிட்டான்.

அம்மா,சீக்கரம் வந்துடவேன் செல்லம்னு சொன்னியேம்மா,
எப்பம்மா வருவே, வாம்மா என கண்களில் பயம் விலகாமல்
மலையம்மாளின் சடலத்தை பிடித்து இழுத்துக் கொண்டுருந்தான்.

எத்தனையோ கனவுகளுடன் இருந்த உயிர்களை காவு
வாங்கியும் தீராமல் வெள்ளம் உருண்டு, புரண்டு
ஓடிக்கொண்டு தான் இருந்தது.


நன்றி :தினமலர் -வாரமலர்

Wednesday, December 15, 2010

புத்திர சோகம்



விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது.சூரியன்
மெல்ல தன் தலையைக் காட்டி உலகை எட்டிப் பார்க்கும்
நேரம். வயக்காட்டில் பம்புசெட்டுப் போட்டு நீர் பாய்ச்சினார்
பெரியவர் சுந்தரலிங்கம். கெட்டியான இருட்டு கரைந்து மனித
தலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன.
வேட்டியை மடித்து தோளிலிருந்த துண்டை உதறி முண்டாசு
கட்டிக்கொண்டு மண்வெட்டி சகிதம் வரப்பில் இறங்கி சரிந்திருந்த
மண்ணை சமன்படுத்தினார்.

“என்னங்க அப்பு, நாங்க செய்ய மாட்டோமா? நீங்க எதுக்கு
இறங்குறீங்க?” பதறி வந்து வாங்கினான் மாடசாமி.

“என்னடா, இந்நேரம் வரீங்க.. இன்னிக்கு நடவு இருக்குனு
நேத்தே சொல்லி வச்சேன். ஒரு பயலும் ஆளைக் காணோம்?”

“தோ, வந்துட்டிருக்காங்கய்யா..”

“சீக்கிரம் எல்லாரும் கட்டை எடுங்க. நல்ல நேரம் ஓடுது.
முதல்ல நானே ஆரம்பிக்குறேன்.. தாயே மகமாயி, மண்ணுல
போட்டத பொன்னா ஆக்கி குடும்மா.. எந்தாயே!”
ஆத்மார்த்தமாக வேண்டி நாற்று நடத் தொடங்கினார்.

“நீங்க உட்காருங்கய்யா, நாங்க செய்யுறோம்.”

“முதலாளிதாண்டா முதல் தொழிலாளியா இருந்து வேலை
செய்யணும்.. ம்.. ஆனா, இப்ப என் மனசு நெனச்சாலும்
உடம்பு கேக்க மாட்டேங்குது. 75 வயசு ஆயிடுச்சில்ல”
கலகலவென சிரித்தார் சுந்தரலிங்கம்.

சுந்தரலிங்கம் சற்றே கருத்த தேகம்.நல்ல திடகாத்திரமான
உடல். வெள்ளி சரிகையென நரை விழுந்த சுருண்ட முடி,
வளர்ந்து கெட்டான் என அழைக்கப்படும் உயரம், மூக்குக்குக்
கீழே அடர்ந்த மீசை. மீசையை அவ்வப்போது முறுக்கிக்
கொள்வதில் அவருக்கு அப்படியொரு சுகம். இந்த வயதிலும்
கண்ணாடி, கைத்தடி என்றில்லாமல் சிறுவனைப் போல வலம்
வருபவர்.

“மடமடனு வேலய முடிங்க. தோ, முக்கிய சோலியா
வீடு வர போயிட்டு வரேன். எலே மாடசாமி..கவனிச்சுக்கடா!”

இரு கைகளையும் கக்கத்தில் சொருகியபடியே “சரிங்கய்யா”
என்றான் மாடசாமி.

சுந்தரலிங்கத்துக்கு இரு மகன்கள் இருந்தும் யாரும்
வயக்காட்டை கவனிக்கவில்லை. படித்து, பக்கத்தில் உள்ள
நகரத்தில் வேலைக்கு சேந்து குடியேறியும் விட்டனர்.
‘நான் செத்தாலும் என் மண்ணோடுதான் சாவேன்’ என
மனைவியுடன் பிடிவாதமாக இங்கேயே இருந்து விட்டார் அவர்.

“மரகதம்.. மரகதம்..”

“ஆங்.. வந்துட்டேங்க”

“நம்ம சிவராஜ் வீட்டுக் கல்யாணத்துக்குப் போகணும்னு
வேட்டி சட்டையை எடுத்து வைக்கச் சொன்னேனே..வச்சியா?”

“ம்.. கடையில கொடுத்து பொட்டி போட்டு வச்சிருக்கேன்.
ஆமா, யார் கல்யாணம்னாலும் இங்கிட்டு வேல இருக்கு..
அங்கிட்டு வேல கிடக்குனு என்னையத்தான் அனுப்புவீங்க.
ரெண்டு நாளா இந்த கல்யாணத்துக்குப் போகணும்னு இப்படி
ஆளாப்பறக்குறீங்களே, என்னமுங்க விஷயம்..? அதுவும்
இன்னிக்கு நடவக் கூட வுட்டுப்புட்டு..”

“அடியே,சிவராஜ் என் பால்ய கால சிநேகிதன்.பெரிய இடம்.
நம்ம மதிச்சி பத்திரிகை வச்சிருக்கான். அதுக்கும் மேல,
‘அடேய், உன் மண்ணுல வௌயுற அரிசியக் காட்டிலும்
ருசியா இந்தூருல எங்கடா இருக்கு அரிசி’னு நம்ம நெல்ல
வாங்கி அவனே தொட்டி போட்டு அரிசியாக்கி பக்கத்து ஊரே
இன்னிக்கு நம்ம மண்ணுல விளைஞ்ச அரிசியத்தான் சாப்பிடப்
போகுது. அத விட வேற என்ன புள்ள சந்தோஷம் வேண்டிக்
கிடக்கு? சாரி, நான் வரேன் புள்ள. நேரமாச்சி இன்னும்
வண்டியப் புடிச்சி போவணும்.”

பேருந்தை விட்டு இறங்கியதுமே வலதுபுறம் அந்த
பிரம்மாண்ட திருமண மண்டபம் கண்ணுக்கு எட்டியது.
அரங்கினுள் நுழையும்போதே விஸ்தாரமான நீர் வீழ்ச்சியில்
சர்ரென நீண்டு விர்ரென கீழே விழுந்தன நீர்த்துளிகள்.
மலர்க் கண்காட்சியோ என வியக்கும் வகையில் அடுக்கடுக்காய்
பூத்துக் குலுங்கும் பலவிதமான மலர்கள் தொட்டிகளில்
பார்வைக்காக.

மிக்கி மௌசும், டொனால்ட் டக் பொம்மையும் வரும்
குழந்தைகளின் கைகளை பிடித்துக் குலுக்கத் தவறவில்லை.
பல வாண்டுகள் அங்கேயே சுற்றி நின்று கொண்டும் சில
குழந்தைகள் ‘வீர்’என பயந்து நடுங்கியும் ஓட்டம் பிடித்தனர்.

சுந்தரலிங்கத்துக்கும் உள்ளூற ஆசை.. அதன் கைகளை
பற்றி,குலுக்க வேண்டுமென்று.ஆனாலும் ஒரு சின்ன தயக்கம்.
பக்கவாட்டில் சென்று கையை நீட்டினார். குனிந்திருந்த
அந்த பொம்மை நிமிர்ந்து குலுக்கோ குலுக்கு என குலுக்கியது.
வாண்டுகளெல்லாம் குதூகலிக்க இவரும் வாய் கொள்ளாமல்
ஒரு குழந்தையைப் போல சிரித்து மகிழ்ந்தார். ‘நம்ம பேரப்
பசங்களையும் கூட்டி வந்திருந்தா இதையெல்லாம் பார்த்திருப்
பார்களே!’என மனதின் ஒரு ஓரத்தில் அடித்துக் கொண்டது.

வாசலிலேயே நின்றிருந்த சிவராஜ், இவரைக் கண்டதும்,
“டேய் சுந்தரலிங்கம், வா வா வா.. நேத்தே வருவேனு
பாத்தேன்” என்றார்.

“ஏகப்பட்ட சோலிடா,அதான் முகூர்த்தத்துக்கு
வந்துட்டேனில்ல.”

“சரி சரி, போய் உட்காருடா.”

தலையாட்டும் மொட்டை செட்டியார் பொம்மை பன்னீரைச்
சிந்தியவாறே சிரித்துக் கொண்டிருந்தார். வானத்து
தேவதைகள் மண்ணில் இறங்கி வந்து விட்டார்களோ என
எண்ணுமளவு பட்டுப் புடவையில் பெண்கள் அலங்காரமாய்க்
காட்சியளித்தனர். குட்டி தேவதைகள் பன்னீர் தூவி
வரவேற்றனர். கற்கண்டை சுவைத்தபடியே இருக்கையில்
வந்தமர்ந்தார் சுந்தரலிங்கம்.

மேடையில் அழகிய மலர் ஜோடனை. வழியெங்கும்
கார்ப்பெட் விரிப்பு கண்ணைக் கவர்ந்தது. அலங்கார
விளக்குகளின் ஒளியில் மண்டபமே நனைந்து கொண்டிருந்தது.

சத்தியமாய், அவர் வயதுக்கு இத்தனை பிரம்மாண்டமான
திருமணத்துக்கு வந்ததே இல்லை. தன் இரு மகன்களுக்கும்
மருமகள்களின் வீடுகளிலேயே திருமணம் நடந்தது.. அதுவும்
மிக எளிமையாக! இனி இதுபோன்ற திருமண வைபவங்களில்
நிறைய கலந்து கொள்ள வேண்டும் என்று மனதில் அசை
போட்டுக் கொண்டார். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு தன்
வீட்டு அரிசியை வாங்கிப் போனதை ஒவ்வொரு தருணமும்
நினைத்து நினைத்து மிகவும் பூரித்துப் போனார்.

மண்டபம் கொள்ளாத கூட்டம்.கெட்டி மேளம் கொட்டியது.
அரிசி மழையில் மணமக்கள் நனைந்தனர். திரையரங்கில்
சுபம் போட்டதும் குபீரென எழும் மக்களைப் போல தாலி
கட்டியதுதான் தாமதம்.. எல்லோரும் பந்திக்கு முந்தத்
தொடங்கினர். சுந்தரலிங்கமும் எழுந்தார். சிறு சிறு
அடி எடுத்து வேகமாக முன்னேறினார். ஏற்கனவே இலை
போட்டு நெய் மைசூர்பா, லட்டு, முந்திரி கேக் என
மூவகை இனிப்புகள், காய்கறி,கூட்டு, பக்கோடா,அவியல்,
பொறியல் வகை வகையாக பரிமாறப்பட்டிருந்தது.
சுந்தரலிங்கம் இருக்கையில் இடம் கிடைத்து அமர்ந்தார்.
இடம் கிடைக்காமல் பலர் ஓரமாக ஒரு மூலையில் ஒதுங்கி
நின்றனர்.

எறும்பைப் போல் வரிசையாய் வந்த சப்ளையர்கள்
பரிமாறி விட்டு மின்னலென மறைந்தார்கள். சுடச்சுட
சாதம் வந்தது. வெந்த சாதத்தின் வாசனையே அலாதி
அவருக்கு. ஒரு சொம்பு தண்ணீரோடு காலையிலிருந்து
அலைந்தவர், ஆனந்தமாய் அந்தக் கல்யாண விருந்தை
ஒரு பிடி பிடித்தார். இலையில் பாதி வயிற்றுக்குள் சென்ற
பிறகு, அக்கம் பக்கம் பார்வையை சுழற்றினார்.

குழம்பு ஊற்றிய சாதத்தை அப்படியே ஒதுக்கி ரசத்தை
வாங்கினார் ஒருவர். அதையும் பாதியிலேயே ஒதுக்கி
மோரை வாங்கினார். அதையும் முழுமையாக சாப்பிடாமல்
அப்படியே மடித்தார். அதிர்ந்தார் சுந்தரலிங்கம்.

பக்கத்தில் இருந்தவா; ஒரு இனிப்பைக் கூடத் தொட
வில்லை.பாதி இலை நிரம்பியிருக்க அப்படியே மடித்தார்.
அவருக்கு மனம் பதை பதைத்தது. கேட்டுவிட்டார்.

“என்னய்யா,இலைல பாதிய அப்படியே மடிச்சுட்டீங்களே..?”

“சார், எனக்கு சர்க்கரை வியாதி. இனிப்பு என் நாக்குல
பட்டாலே சுகர் ஏறிடும். தவிர, எண்ணெய் எனக்கு ஆவாது.
நீங்க கொடுத்து வச்சவர் சார்.நல்லா வெளுத்துக் கட்டுறீங்க.”

இந்தப் புறம் திரும்பினார்.‘இது வேண்டும் அது வேண்டும்’
என கேட்டுக் கேட்டு வாங்கி மொத்தத்தையும் அப்படியே
மூடினார் ஒருவர் கோபம் தலைக்கேறியது சுந்தரலிங்கத்துக்கு.

“எல்லாத்தையும் கேட்டு வாங்கி அநியாயமாய் அப்படியே
மடிச்சிட்டீங்களே”

“நான் மாப்பிள்ளை வீட்டுக்காரன்யா.. நம்ம கூப்பிட்ட
குரலுக்கு ஓடி வந்து கவனிக்குறாங்களான்னு பார்த்தேன்.
நல்லாவே கவனிக்குறாங்க.”

தலை சுற்றியது அவருக்கு. மீதம் இருந்தவற்றை
சாப்பிடவே உணர்வற்றுக் கிடந்தார்.

“எல்லோரும் எழுந்துட்டாங்க, பெரியவரே.. சீக்கிரம்
சாப்பிடுங்க, அடுத்த பந்திக்கு ஆளுங்க நிக்குறாங்க” என்ற
குரலைக் கேட்டு லபக் லபக்கென இலையில் இருந்தவற்றை
உருட்டித் தள்ளினார்.

கை கழுவி திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் இலையி
லேயே பாதியை வைத்து மூடினர்.ஆடம்பரத்தையும் பிரம்
மாண்டத்தையும் பார்த்து ரசித்த அவர் கண்கள், இந்தக்
காட்சிகளைக் கண்டு கதறியது, செய்வதறியாது திகைத்தது.

தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞன்
ஒருவன் பரிமாறும் பணியாட்களை கை சொடுக்கு போட்டு
அழைத்த வண்ணம் இருந்தான். கூர் மையாக ஊடுருவியவர்,
மீண்டும் முகத்தைத் தொங்கப் போட்டார். இம்முறையும்
விடாமல் வினவியதற்கு, நிமிர்ந்து கண்ணாடியை சரி
செய்தவண்ணம் மேலும் கீழும் இவரை “என்னென்ன
ஐட்டம் மொத்தம் போட்டாங்கன்னு தெரிஞ்சுக்க வேணாமா
பெரியவரே?” என்றான்.

“தெரிஞ்சும் உங்களால சாப்பிட முடியலையே. ஒரு
மழைக் காகிதத்துல வச்சி வீட்டுக்கு எடுத்துப் போனாலும்
புள்ளைங்க சாப்பிடுமே..”

“சரியாப் போச்சு.யார் பெரியவரே அசிங்கமா தூக்கிட்டுப்
போறது? மூடி வச்சா முடிஞ்சு போச்சு!”

உண்மையிலேயே நிலைகுலைந்து போனார் சுந்தரலிங்கம்.
‘மண்ணில் ஒரு அரிசியை எடுக்க எவ்வளவு வியர்வை சிந்தி,
மழையுடன் போராடி எத்தனை மாதம் காத்திருந்து உழைக்கிறோம்.
பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளைய ஆசையா பாக்குற
ஆத்தாளாட்டம், ஒவ்வொரு அறுவடையிலயும் நான் புள்ளையா
என் நெல்லு மூட்டைகளை பாத்தேனே.ஒவ்வொருகுண்டுமணி
நெல்லா நான் சேகரிச்சது இங்கே சகதியில் வீணாகுதே.
கடவுளே.. இதப் பாக்கத்தான் இங்க வந்தேனா?

அவனவன் கண்ணால பாக்குறதத் தாண்டி வயித்துக்குள்ள
கூட தள்ளல. நம்ம ஆளுங்க ஒரு பருக்கை விடாம வழிச்சி
சாப்பிடுவானுங்க. அவங்க எங்க, இவங்க எங்க! கவுரவத்த
பாக்குறதுக்கும் கவனிக்குறாங்களானு பாக்குறதுக்கும் உணவுப்
பொருள் அவ்வளவு இளக்காரமா? உழைச்சவனுக்குத் தானே
அந்த உணர்வு புரியும். இலையோட கீழ போனதே இன்னொரு
பந்தி பரிமாறலாம் போலிருக்கே!’ என எக்கச்சக்க மனப்
போராட்டங்கள் அவருக்குள்.

ஒரு அரிசிப் பருக்கை கீழே சிந்தினால், அதைஊசியால்
குத்தி, தண்ணீரில் நனைத்து, மீண்டும் இலைக்குள்
இடுவாராம் வள்ளுவர். நான்காம் வகுப்பு ஆசிரியர்
நடத்தியது பசுமரத்தாணி போல மனதில் படிந்து போயிருந்தது
அவருக்கு. ஏறத்தாழ அவ்வாறே வாழ பழக்கப்பட்டவர்.

மண்டபத்துக்கு வெளியே வந்தார். உள்ளே நுழைகையில்
மனதும் வயிறும் காலியாக இருந்தது. இப்போதோ வயிறு
சாப்பாட்டையும் மனது சங்கடத்தையும் சம்பாதித்திருந்தது.

“என்னடா சுந்தரலிங்கம்..சாப்பிட்டியா? சமையலெல்லாம்
எப்படி இருந்தது” வாசலில் நின்ற சிவராஜ் கேட்கக் கேட்க
கவனியாது, புத்திரசோகத்தோடு வெளியேறினார் சுந்தரலிங்கம்.


நன்றி-தேவதை

அத்தை


மழை அடர்வாக வலுப்பதும், தூறலாய்ச் சிறுப்பதுமாய்க்
கண்கட்டுவித்தை காட்டிக் கொண்டிருந்தது.செம்மணிட்ட கோலம்
உடனே கலைவதைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்
சியாமளா.தொலைபேசி அலறி உள்ளே அழைத்தது.

கேட்டது தான் தாமதம்.அவளின் தினசரி வேலைகள் செயலிழந்து
போயின.அவளைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த அத்தை ஊரில்
உணர்வற்று இழுத்துக் கொண்டிருக்கிறாள் என்று வந்தது சேதி.உடனே
கிளம்பலாம் என்றால் இதோ நவராத்திரியின் பொருட்டுக் கலசம் நிறுத்த
வேண்டிய முக்கிய நாள்.அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த ராமிடம்
விஷயத்தை அடிக்கோடிட்டாள்.

“என்ன இழுத்துண்டிருக்காளா?”
“ம்… கண்டிப்பா போய்ப் பார்க்கணும்”.

“என்ன விளையாடுறியா… ஏற்கெனவே நிறைய லீவு வேற
எடுத்துட்டேன். இனிமேல் எடுத்தேன்னா எம்.டி. என்னைக் கூப்பிட்டு
வார்ன் பண்ற நிலைமைதான் வரும்”.

“சரிங்க, நான் தனியாவே போய்க்குறேன்”.

“சியாமு, அது ஒண்ணும் தமிழ்நாடு இல்லை, ஹைதராபாத்.பாஷை
தெரியாத ஊர்ல தனியாப் போய் என்ன பண்ணுவ நீ? பரத்துக்கும்
வைஸுக்கும் காலாண்டுப் பரீட்டை வேற. ஞாபகம் வெச்சுக்கோ.
அவங்கென்ன அம்மாவா…அத்தைதானே?”

எவ்வளவு சாதாரணமாய் வந்துவிட்டது அவரிடம் இருந்து வார்த்தைகள்.
பாசம் காண்பிப்பதில் பாகுபாடு காட்டி உறவின்பால் பிரித்துப் பேசும்
கணவனை என்னவென்று சொல்வது?

மழை வலுத்த நேரம் மீண்டும் தொடர்ந்தாள்.

“பிராக்டிகலா பாரும்மா. ஒரேயடியா ‘டெத்’துக்கு போகலாம் விடு”.

“போதும் நிறுத்துங்க.உயிரோட இருக்கறவங்கள நீங்களே கொன்னுடாதீங்க”.

“எதுக்கிப்ப கண்கலங்கற… எங்கம்மா பர்மிஷன் கொடுத்துட்டா நீ
தாராளமா போயிட்டு வா. வர்றேன்”.

கோயிலுக்குச் சென்றிருந்த மாமியார் மீனாட்சியின் வருகைக்காகக்
காத்திருந்தாள். மாமி மனமிறங்கிவிட்டால் உடனே கிளம்பலாமே என்று
வேலைகளை மட மடவென முடித்துக் கொண்டிருந்தாள்.

அன்று புரட்டாசி மாத அமாவாசை. கொலு வைக்கும் பழக்கம் உள்ள
குடும்பம்.இருபதுக்குப் பன்னிரெண்டான வீட்டுக் கூடத்தினுள் ஒன்பது படிகள்
நிறுத்தி வெள்ளை வேட்டி நிரவினாள்.

வழக்கமாய்க் கையிலெடுக்கும் பொம்மைகளின் கூரிய முகம்,
பேசும் கண்கள், அமைப்பான முகம், தவறாது சிவப்புச் சாயம் பூசிய
உதடுகள், சுவாமி பொம்மைகளிலுள்ள நகைகள் இவற்றின் அழகைப்
பார்த்து வியந்தவண்ணம் துடைத்துத் துடைத்து அடுக்கி வைப்பாள்.ஆனால்,
இவ்வருடம் அவளுக்குத் தவிப்பாய்ப் போயிற்று.

பொம்மைகள் வரிசையாக அடுக்கப்பட்டு படிக்கு படி கீழிறங்க
அத்தையின் ஞாபகங்கள் மன அடுக்கில் மேலெழும்பிக் கொண்டிருந்தன.

திருமணமாகாமல் முதிர் கன்னியாய் சில காலம் இருந்த அத்தையிடம்
நீண்டநாள் உறவு கொண்டாட முடிந்தது இவளுக்கு. அத்தைக்கு இடுப்பைத்
தாண்டிய நீள முடி.முன்பக்கப் பற்கள் துருத்திக் கொண்டிருப்பதால்தான்
திருமணம் தள்ளிப்போனது என்று பாட்டி கூறுவாள்.

எத்தனை அழகாய் பல்லாங்குழி ஆடச் சொல்லிக் கொடுத்தாள்.நான்
தோற்கக்கூடாது என்பதற்காக எத்தனை தரம் தான் தோற்றிருக்கிறாள்?
பங்க் கடையில் பன்னீர் சோடா வாங்கிக் கொடுப்பதிலாகட்டும், மேட்டுத்
தெரு சுப்பய்யா வீட்டுக் கொடிக்கா புளிக்கா மரத்தில் கல் எறிந்து கொடிக்கா
புளிக்கா பறித்துத் தருவதிலாகட்டும்,அத்தை அத்தைதான்.

சமயத்தில் அத்தைக்கும் அம்மாவுக்கும் முட்டிக்கொள்ளும்.
பெரும்பாலும் அம்மாவின் மீதுதான் தவறு இருக்கும்.

“ஏன் அத்தை, சொல்ல வேண்டியது தானே பாட்டிகிட்ட,” என மனம்
வெதும்பி நான் சொல்லிய சில வேளைகளில் கூட “ம்… அப்புறம் என்
செல்லக்குட்டிய அண்ணி எங்கூட விளையாட விடாட்டா நான் என்ன
செய்வேன்?” என்பாள் வேடிக்கையாக.

அம்மாவுக்கு எனக்கடுத்து தொடர்ந்து இரு பிள்ளைகள் பிறந்து, பிறந்த
மனை சென்றபோதும் தாயினும் மேலாக என்னை பார்த்துக் கொண்டவர் அத்தை.

எனக்கும் என் தங்கைக்கும் ஒரே சமயத்தில் அவளுக்குக் குழந்தை
பிறப்பும் எனக்கு அபார்ஷனுமாய் ஆகிப்போக, இருவரும் ஒருவர் முகத்தை
மற்றொருவர் பார்க்கக்கூடாது எனச் சொல்லிவிட்டனர். அவளுக்குத் தீட்டு
எடுக்கும்வரை அத்தை அவரின் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று பத்து நாள்
என்னைப் படுக்கையிலேயே படுக்க வைத்து உடல்தேற்றி மனம் மாற்றி தைரியம்
தந்தவள். ஆயிற்று. அத்தை தம் மகனுடன் ஹைதராபாத்தில் இரண்டு
வருடங்களுக்கு முன் குடியேறிவிட்டார். அதுமுதல் அவரைப் பார்ப்பது கடினம்
என்றாகிப் போனது. கடைசியாய் ஒன்றுவிட்ட சித்தப்பா பையனின்
திருமணத்துக்கு வந்திருந்தார்.

“சியாமளா… செத்த காப்பி எடுத்துட்டு வா,” மீனாட்சி வாசல் நுழையும்
முன்னே ஏவுகணை வேகத்தில் இவளிடம் வந்து சேர்ந்தன வார்த்தைகள்.காப்பி
கொடுத்தபடியே காதுக்குள் போட்டு முடித்தாள் சங்கதியை.

“தோ பாருடிம்மா… கலசம் நிறுத்தி நவராத்திரி கும்பிடுற பழக்கம் நம்மளது.
வர்ற சுமங்கலிகளுக்கு என்னைப் போன்றவளா தாம்பூலம் கொடுக்க முடியும்?
ஆம்பளைக்குக் கிருத்திகை ஆகாது. பொம்மனாட்டிக்கு அமாவாசை ஆகாது.
அமாவாசை தோ… கழியப் போவுது. சேதி ஒண்ணும் வரலியே, விடு.
அடுத்த அமாவாசை தாங்கும். அதான் பேச்சு மூச்சில்லாம இருக்காளே,
பார்த்து என்ன பண்ணப் போற? நவராத்திரி முடிய உங்கத்தையைப் பார்க்குற
சிந்தனை மட்டும் வெச்சுக்காதடிம்மா, கலசம் நிறுத்தியிருக்கு. பின்னாடி
குடும்பத்துக்கு ஆகாது,”பட்டாசாய்ப் பொரிந்த பேச்சுக்களூடே உள்மனத் தவிப்பை
எப்படி எடுத்து வைப்பது? முள்ளின் மேல் நடப்பவளாய் நாட்களைக்
கழித்தவள் நவராத்திரியும், பிள்ளைகளின் பரீட்சையும் ஒருசேர முடிய ரயிலில்
பிள்ளைகளுடன் புறப்பட்டாள்.

இதோ ஜங்ஷன் முடிந்து ஆட்டோ பிடித்து தெருமுனைக்கும் வந்தாயிற்று.

‘நீங்கள் உயிருடன் இருக்கும்போதே நான் இங்கு வந்திருக்கிறேன் அத்தை’
என்பதை அவள் ஸ்பரிசத்தின் மூலம் அவருக்கு உணர்த்த இன்னும் சில
நிமிடங்கள் போதும். எழுச்சியான அந்த உணர்ச்சியுடன் சியாமளா
ஆட்டோவிலிருந்து இறங்குகையில் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது
அத்தையைச் சூழ்ந்திருந்த சொந்தங்கள்,‘விட்டுட்டுப் போயிட்டியே’என்பதாய்.


நன்றி: கல்கி

Tuesday, December 14, 2010

வாழ்க்கை சதுரங்கம்




அடர்ந்த பனி பொழியும் பின்னிரவு நேரத்தில் விழிப்பு கண்டது வள்ளிக்கு.
வயிற்று நாளங்கள் ஏதேதோ செய்ய குமட்டிக்கொண்டு வந்தது. வஞ்சனையின்றி
மொத்தமும் வாந்தியாய் எடுத்தாள். அயற்சியில் சாய்ந்தவளை கைதாங்கிப்
பிடித்தான் ரங்கன்.

தலைமுழுக்கு தள்ளிப்போன நாளை கணக்கிட்ட பின் சூரியனைக் கண்ட
தாமரை போல் முகமலர்ச்சிக்கு ஆளானார்கள் இருவரும். அற்புதமான
கனவைப்போல் இருந்தது, அந்த நிகழ்வு. திருமணமாகி நான்காவது மாதமே
கரு தங்கிவிட்ட பூரிப்பு. ஏற்றி வைத்த தீபமாய் அவளின் தங்கமுகம் பளபளத்தது. குழந்தை கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

'மாமா, உங்களை மாதிரியே ஒரு புள்ளைய பெத்து கொடுப்பேன் பாக்குறியளா..?”

'வேணாம் வள்ளி, உன்னய போலவே பொட்ட சிருக்கித்தான் மகளா வாய்க்கணும்.”

'பாப்போம் மாமா, யாரு நினைப்பு நெசமாவுதுன்னு.”

'பாரு... பாரு... விடிய இன்னும் நேரம் கெடக்கு, பொறவு
பேசிக்கலாம் புள்ள, தூங்கு.” ஆசுவாசப்படுத்தியவனின் கண்களில் மெல்ல உருண்டு
திரண்டு எட்டிப் பார்த்தது நீர்.

ரங்கன், இளவயது கருத்த ராமராஜனை போன்ற தோற்றம்.முன்நெற்றியில்
கீற்றாய் வந்து விழும் மயிரை அவ்வப்போது கோதி விட்டுக்கொள்வதில் அலாதி பிரியம்
கொண்டவன். முள்ளண்டிரம் கிராமத்து இளைஞர்களின் சொத்து.

ரங்கனின் அக்கா சரோஜா சேதி கேட்டு கைகொள்ளா பட்சணத்துடன் பார்க்க
வந்தாள் வள்ளியை. கலைந்த தலையும் புகையிலை நெடியுமாய் உடன் வந்தான்
சரோஜாவின் கணவன் வேலு.கோரைப் பற்கள் தெரிய அவன் சிரித்த சிரிப்பில்
சொத்தைப் பல்லை மூடிய மறைப்பான்கள் அப்பட்டமாய் தெரிந்தது. அவர்கள் கொட்டிய
பாசத்தில் சொக்கித்தான் போனாள் வள்ளி.

குழந்தைக்கு ஏங்கித் தவித்த அவளின் 12 ஆண்டு திருமண வாழ்க்கையை
வரும் போதெல்லாம் புழக்கடை தாழ்வார திண்ணை மீதமர்ந்து புலம்பித் தள்ளுவது
சரோஜாவின் வாடிக்கை. உச்சுக் கொட்டுவதோடு அவ்வப்போது தலையையும்
ஆட்டி வைப்பாள் வள்ளி.

முதல் தாரத்தின் பிள்ளையாகிப் போனதால் பிறந்த வீட்டின் சீர்களை
எதிர்பார்க்காதவளானாள் வள்ளி. தனது சித்தி இவளை ரங்கனுக்கு கட்டிக் கொடுத்ததே
அதிசயத்திலும் அதிசயம் என வியப்பவளாயிற்றே.

வள்ளியின் வயிறு பெரிதாக பெரிதாக ரங்கனின் முகம் வாடிக்கொண்டே போனது.
கடவுள் போட்டோ முன்னே நின்று வெறித்து நோக்குவதும், கும்பிடுவதுமாக இருந்தது.
நெஞ்சுக்குள் உறுத்தியது இவளுக்கு. பழைய உற்சாகம் ரங்கனிடம் இருந்த இடம்
தெரியவில்லை.

அன்றொரு முன்பனிக்கால இரவில் அவனை பக்கத்தில் இருத்தி கேட்டே விட்டாள்.
அரை மணி நேர மவுனத்திற்குப் பின் மடை திறந்த வெள்ளம்போல் சீறிப் பாய்ந்தாள்.

இரு கைகளையும் கன்னத்தில் வைத்தவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அதான் புள்ள, நீ அழுவேன்னு தான் நான் இத்தனை நாளா உங்கிட்ட சொல்லல.

'மாமா, என்னய உசுரோட சமாதியாக்க முடிவு பண்ணிட்டியலா...
எப்படிய்யா சத்தியம் பண்ணிக்கொடுத்த...”

'அழாத புள்ள... எங்கக்காவுக்கு பத்து வருஷமாகியும் புள்ள இல்லன்னு
கலங்கி எங்காத்தா சாவற நாளுல, எனக்கு கல்யாணமானதும் பொறக்குற மொத
புள்ளய அக்காவுக்கு தாரவாக்கணுமுன்னு சத்தியம் வாங்கினு செத்துப்போச்சு.
ஊரார்ட்டல்லாம் மலடி பட்டம் வாங்கி அழற அக்காவ, பாக்க பாவமாக இருக்கும் புள்ள.
அதான் அப்ப சம்மதிச்சுட்டேன். அக்காவுக்கும் இது தெரியும். அதனால..
அதனால... பொறக்கப்போற புள்ளய கொடுத்துறலாம் புள்ள...”

'யோவ்... உனக்கு பைத்தியம் புடிச்சுடுச்சா... எப்படிய்யா என் சம்மதம்
இல்லாம இத்த நீ செய்ய முடியும். நான் கொடுக்க மாட்டேன். என் புள்ளய நான்
கொடுக்கவே மாட்டேன்” என கத்தியவளாய் புட்டுக்கூடை போன்ற வயிறை இறுக்கி
பற்றிக் கொண்டாள்.

'வள்ளி, அதான் நாள் ஏற ஏற எனக்கு சோறு தண்ணி எறங்கல. நம்ம
புள்ளய அக்காவுக்கு கொடுக்கணுமேன்னு இப்ப கிடந்து மனசு அடிச்சிக்குது.”

'மாமா, இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. மோத புள்ளய நாம
வெச்சிக்குனு இரண்டாவது புள்ளய அவுகளுக்கு கொடுத்துரலாம்.”

'நானும் அக்காட்ட எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன் புள்ள. எங்களுக்கு
வயசாயிடுச்சி, மொத குழந்தை எங்களுக்கு தேன். அடுத்த பத்தாவது மாசம்
இன்னொன்ன பெத்துக்குயேன்டான்னு சொல்லிடுச்சி வள்ளி.”

'அய்யோ மாமா... இப்பல்லாம் எம்புட்டு வருஷமானாலும் புள்ள
பெத்துக்கிடலாம். மதினிக்கு 35 வயசுதானே ஆவுது.”

'வயசு கிடக்கட்டும் புள்ள. பாக்காத வைத்தியமில்ல. மேற்கொண்டு
போவ துட்டு ஏது... நாங்கெல்லாம் கஞ்சிக்கு வாக்கப்பட்டவுக. உழைச்சாத்தான்
சோறு. அதுவும் எம்மாமனை பத்தித்தான் உனக்கு தெரியுமே... ஊருக்கு அடங்காத
குடிகார கபோதி. மாத்திப் பேசினா மானத்த வாங்கிடுவான்.”

'பாருபுள்ள, மனச கல்லாக்கிக்க... சத்தியத்தை மீறினா, நம்ம புள்ளைக்கு
ஏதாச்சும் ஆயிடுமோன்னு நெஞ்சு பதறுது. உனக்கு நானிருக்கேன்டா... அடுத்த
வருஷமே இன்னொரு குழந்தைய நீ கொஞ்சத்தான் போற பாரு... இப்ப படு புள்ள.”

நனைந்த ஒரு பக்க தலையணை சொன்னது அவளின் மிக நீண்ட கண்ணீர்
இரவை. அடுத்தடுத்த நாட்களில் சரோஜாவை கண்டாலே முகம் கொடுத்துப் பேச
விருப்பமின்றி தட்டை வீட்டின் உரல் புதைக்கப்பட்ட அந்த குறுகிய வாசலில் கால்
நீட்டியபடி உட்கார்ந்துக் கொள்வாள். சரோஜாவே வலிய வந்து அவள் தலையை
சீவி விடுவதும் பூத்தொடுத்து வைத்து விடுவதுமாக இருந்தாள்.

சுமையை இறக்கும் நாள் செவிலி மூலம் தெரிய வர அந்த வயிற்று
வெறுமையை எதை இட்டு நிரப்புவது என மனது சத்தமாக அரற்றிக் கொண்டது.

இப்படிக்கூட சத்தியம் செய்வாகளா என நாளைக்கு 10 முறை வீதம்
ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள் ரங்கனிடம்.

'இதப்பாரு புள்ள கஷ்டம்தான். இரண்டு தெரு தள்ளினா அக்கா வீடு.
தெனம் ஒரு எட்டுப் போய் பாத்துட்டு வரலாம். நம்மள காட்டியும், அக்கா பாசமா
பாத்துக்கிடும்புள்ள... நீ கவலப்படாத.”

நெஞ்சு விடைக்கும் போதெல்லாம் மயிலிறகு வருடுவதாய் வந்து விழும்
வார்த்தைகளால் எப்படியோ பனிக்கட்டியாய் நாட்கள் கரைந்தன.

இடுப்பு வலி எடுத்து கோட்டாஸ்பத்திரியில் ஆண் பிள்ளை பிறந்த வேகத்தில்
கோடாலி முடிச்சு கொண்டையுடன் வந்துவிட்டாள் சரோஜா. தூக்கி மாரோடு கொஞ்சியவள்
கொண்டு வந்த பாலை சங்கில் புகட்டலானாள்.

மயக்கம் தெளிந்து பால் கொடுக்க கேட்ட வள்ளிக்கு,
'அக்கா தூக்கிட்டு போயிடுச்சு வள்ளி” என்ற பதில்தான் வந்தது.

'மாமா, புள்ள முகத்த பாத்ததோட சரி, ஒருவாட்டி மாரோட
அணைச்சுப் பால் கொடுத்துக்குறேன். மொதல்ல வர்ற சீம்பால்ல அம்புட்டு சத்து
இருக்கறதா நர்ஸ்ம்மா சொல்லுச்சு. ஒரு எட்டுப் போய் தூக்கிட்டு வா மாமா...”

'நீ பால் குடுத்தா பாசம் ஒட்டிக்கும்னு சொன்னாலும் கேக்காம தூக்கினு போயிடுச்சு.
எப்படியும் அவுகளுக்கு குடுத்துப்புட்டோம். விட்டுட வள்ளி.”

'யோவ்... அய்யோ... ஒரு தாயோட தவிப்பு உனக்கு புரியலேய்யா”,
தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டே அழுது தீர்த்தாள்.

'பச்ச ஒடம்புக்காரி, உனக்கு அழுதா ஆவாது புள்ள” சொன்னவாறு வாரி
அணைத்துக் கொண்டான் வள்ளியை.

எக்கச்சக்கமாய் அறிவுறுத்தினாள் செவிலி. மூன்றே மாதத்தில் மீண்டும்
கருவுறுவது உடல்நலத்திற்கு ஆவாது என எச்சரித்தாள். எதுவும் அவள் காதுகளில்
விழவில்லை. மாறாக தோட்டமெங்கும் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டது போல்
மனம் கருவுற்றதில் எம்பிக் குதித்தது. இந்த பிள்ளை யாருக்கும் சத்தியம் செய்யலையே
என ரங்கனிடம் ஊர்ஜிதம் செய்துக்கொண்டாள். பெரிய இழப்பிற்கு பின் பெற்ற சொர்க்கமாக
மீண்டாள்.

வாரம் ஒரு தரம் சென்று மகனை ஏறிடும் போதெல்லாம் 'மாமி கூப்புடுறாக.
பாரு... போ.. போ...” என மாறி மாறி உறவைச் சொல்லும் மதினியையும்
வேலுவையும் நினைக்க எட்டிக் காயாய் கசக்கும் உள்ளுக்குள். வர்ற வருஷத்துல என்
புள்ளயோட வளார்ச்சியும் இப்படித்தான் இருக்கும் என மனதுக்குள்ளாகவே கணக்குப்
போட்டுக் கொள்வாள் வள்ளி. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை அந்த பேதைப்பெண்
அறியவில்லை பாவம்.

பத்து நாட்களில் பிள்ளை பிறந்துவிடும் என டாக்டரம்மா கொடுத்த தெம்பில்
வீடு திரும்பி நடக்கையில் எதிர் வீட்டு சுப்பையா சொன்ன சேதி, தலையில் இடியென
இறங்கி அப்படியே மயங்கி சரிந்தாள்.

கிணறு தோண்டும் வேலையில் மண் சரிந்து மரித்துப் போனான் ரங்கன்.
உடம்பெங்கும் ரத்தக் காயங்கள் இருக்க தூங்குவது போலவே கடைசி மூச்சை விட்டிருந்தான்.
தொலைக்காட்சி செய்திகளில் ஒரு சானல் விடாது போட்டுக் காட்டியாயிற்று. நமக்குனு
இருக்க இருந்த புள்ளய பாக்காமயே போயிட்டியேய்யா மார்பிலும் தலையிலும் அடித்துக்
கொண்டாள் வள்ளி. எதுவும் திரும்ப வரவழைக்கவில்லை ரங்கனை.

நாள் ஆகியும் வலி எடுக்காத நிலையில் கோட்டாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.
பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப தன் பூப்பாதம் பூமியில்
படுமுன்பே தன் மூச்சை இழந்துவிட்டிருந்தது அந்த மொட்டு. இந்த மகவேனும் தன்
மார்பை சப்பியிழுத்து பால் குடிக்கும் என கண்ட கனவெல்லாம் தூள் தூளாகியது.
மார்புக் காம்புகளில் அப்பிஞ்சு உதடுகளை நிறுத்தி பார்த்து ஒப்பாரி வைத்தாள். இனி
மற்றொரு முறை நிகழ சாத்தியமில்லை என்ற நிஜம் சுட்டது. சரோஜா எவ்வளவு சொல்லியும்
பிள்ளையை கீழே வைக்கவில்லை அவள். மார்போடு அணைத்திருந்த மகனை புதைக்க
பிடுங்கிக்கொண்டு சென்றது ஊர்.

அப்பனுக்கும் பிள்ளைக்கும் சோர்த்தே காரியங்கள் முடிந்தது. சரோஜா
வீட்டிலேயே சில காலம் தங்கியிருக்க ஊர் ஒத்து ஊத மெல்லவும் முடியாமல் விழுங்கவும்
இயலாமல் குமைந்தாள் சரோஜா. வள்ளியின் பார்வை முதல் மகன் துரைராசின் மீது
படும்போதெல்லாம் யாருமறியா சரோஜாவின் மற்றொரு முகம் வெளிப்பட்டு
சங்கடத்திற்குள்ளாக்கியது வள்ளியை. தான் ஒருதரம் துரைக்கு சோறு ஊட்ட கெஞ்சி
கூத்தாடியும் மறுக்கப்பட்டாள். வேலைக்கு அடிபணியும் கொடுமையும் நித்தம் அரங்கேறியது.

கண்ணில் விழுந்த மண்ணாய் உறுத்திக் கொண்டிருந்த மனதால் உளைச்சலுக்கு
ஆளானாள். சரோஜா இல்லாத நேரத்தில் துரையை தூக்கினாலும் அவன் இவளிடம்
ஒண்டுவதில்லை. தன் மகனே தன்னிடம் வர மறுக்க மாறாக அவனை சீண்டினால்
சரோஜாவும் வேலுவும் உக்கிரத்திற்கு போவதை காணக் காண வள்ளிக்கு ஒரு கட்டத்தில்
புத்தி திரும்பிப் போனது. பைத்தியம் பைத்தியம் என்ற ஏளனத்திற்கு ஆளானாள்.

அப்படியொருக்க துரைராசுவை இங்ஙன வா என விரட்ட ஆரம்பிக்க,
பழையதிற்கென கழிக்கப்பட்ட அந்த பத்துக்கு பத்து அறையில் இரவோடு இரவாக தூக்கி
எறியப்பட்டு பூட்டி வைக்கப்பட்டாள், வள்ளி. ஜன்னல் வழியே நீரும் ஆகாரமுமாய்
இரண்டு நாட்கள் கழிந்தது. எதிர்ப்பின்றி போனதால் அந்த தகரக் கதவு பின்வரும் வெக்கை
நாட்களில் திறந்தே வைக்கப்பட்டது. நீண்ட பகலிலும் குளிர்ந்த இரவிலும் அவளின் பேச்சு
சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

கழித்து கட்டப்பட்ட பொருட்களிலேயே தனக்கான ஒரு குழந்தை பொம்மையை
தயார் செய்து கொண்ட அவள் அதனோடே பேசி அதனோடே வாழ்ந்தாள்.

துரைராசு என்றே பெயரிட்டு அழைத்துக் கொண்டாள். சரோஜாவும் வேலுவும்
எதிரில் பார்த்துக்கொண்டால் பதுங்கிக்போகும் அவள், ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் எந்த
மூஞ்சிக்கும் கையில் கிடைக்கும் பொருளை தூக்கி வீச ஆரம்பித்திருந்தாள்.

ஆண்டுகள் கழிய துரைராசு பள்ளிக்கு செல்வதை அறிந்து இவளும் தன்
விளையாட்டு குழந்தையை காலை முதல் பள்ளிக்கு தயார் செய்வாள். மாலை வந்தது
முதல் பள்ளிக்கு சென்று வந்த கதையைப் பற்றி ஓயாமல் விசாரிப்பு தொடரும். அவளின்
கோதுமை நிறம் மெல்ல தேய்ந்து கருமைக்கு மாறியிருந்தாள். எப்போதும் அந்த தகரக்
கொட்டகையில் அடைந்து கிடந்ததில் அத்திப்பூத்தாற்போல் வெளியே எட்டிப்பார்த்தாலும்
வெயிலால் கண்கள் கூசியது வள்ளிக்கு. வள்ளி என்ற பெயரும் மறந்துத்தான் போனது.

துரைராசு விநோத சத்தத்தினால் புழக்கடை ஒதுக்கு அறை பக்கமே போக
மறுத்தான். நேரம் ஆகிவிட்டால் என் குழந்தைக்கு சோறு எங்கே… பசிக்குது… சீக்கிரம்
எடுத்து வா என தகரக் கதவைத் தட்டி தட்டி ஒலி எழுப்புவதும் அவ்வப்போது
வாடிக்கையாய்போனது.

பிள்ளைக்கு ஊட்டுவதாக சொல்லி பாதி சோற்றை பாழடிப்பதைக் கண்டு
அவ்வப்போது வள்ளியை போட்டு சாத்த தொடங்கினான் வேலு. சரோஜாதான் ஊரார்க்கு
பயந்து ஓடிவந்து மடக்குவாள் அந்த முரடனை.

அடியும் மறத்துப்போனது அவளுக்கு. மாறாக அந்த பொம்மை மேல் துரும்பும்
படாதவாறு இறுக்கிப் பிடித்திருப்பாள். இந்த நரகத்திலிருந்து தன் மகனை மீட்டு விடுவதாக
அதனிடமே புலம்பிக் கொண்டிருந்தாள்.

அதை நிறைவேற்ற ஒரு மழை இரவில் கதவை திறந்துக்கொண்டு மெல்ல
தன் பொம்மையை இடுப்பில் கிடத்தியபடி வெளியேறினாள் வள்ளி.

சத்தம் கேட்டு விழித்த சரோஜாவும் வேலுவும் ஒலி எழுப்பாமல் கட்டைபோல்
படுத்திருந்தார்கள். பின் எப்போதும் அவள் வீடு திரும்பவேயில்லை.

தெருக்களில் அனாதையாய் சுற்றித் திரியும் பித்துப் பிடித்தவர்களில் ஒருவராய்
எங்கேனும் இருக்கக்கூடும் அவள்.


நன்றி:தினமலர்-வாரமலர்.

Saturday, October 23, 2010

அழகி

         கடுமையான காய்ச்சல் அடித்தது நகுல்யாவுக்கு. நாளை மிஸ்.
இந்தியாவுக்கான இறுதிப் போட்டி. நூற்றுக்கணக்கான போட்டி
யாளர்களைப் பின்னுக்குத் தள்ளி,இறுதிப் போட்டிக்கு தேர்வான
பத்து பேரில் அவளும் ஒருத்தி.முடிந்தவரை மருந்துகளை விழுங்
கிவிட்டு படுத்து உறங்கினாள்.

        காலையில் எழுந்து,கண்ணாடி முன் நின்றவளுக்கு..
அதிர்ச்சி!அம்மை நோய் தாக்கி,முகத்திலும் உடம்பிலும் எழும்பி
இருந்தன நீர் கொப்புளங்கள்.கண்கள் மூடி கண்ணீரை அடக்கினாள்
நகுல்யா.

      மாலை மயங்கும் நேரத்தில் காத்திருந்தது அந்த பிரம்மாண்ட
அரங்கம்.போட்டி ஆரம்பமாக,ஆழகிகள் ஒவ்வொருவராக நடந்து
வந்து பார்வையாளர்களின் கண்களை கட்டி போட்டனர். நகுல்யா
வந்தாள்.ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் அமைதி
படர்ந்தது. நடுவர் கேட்டார்...”இந்த தழும்புகளை மீறி வெற்றி
பெறுவீர்கள் என்று நம்புகிறீர்களா?

        நிதானமாக கசிந்தது நகுல்யாவின் குரல்...”என் அழகிய
முகத்தை ஏற்கனவே பல ரவுண்டுகளில் பார்த்துவிட்டீர்கள்.இந்த
இறுதிப் போட்டி,என் தன்னம்பிக்கைக்கானது.இன்று தோன்றி
நாளை மறையும்  இந்த வடுக்களைப் போல,வெளிப்புற அழகும்
நிலையற்றது;தன்னம்பிக்கை தான் நிலையானது என்பதற்கு இந்த
மேடையில் இப்போது நான் உதாரணமாகிப் போயிருப்பதில்
பெருமையே அடைகிறேன்.என் உடம்பில் இப்போது குறை
ஏற்பட்டிருக்கலாம்.ஆனால்,என் மனது இப்போது தான் மிக
அழகாக இருப்பதாக உணர்கிறேன்.”

          மொத்த கூட்டமும் எழுந்து நின்று எழுப்பிய கைதட்டல்
ஓசை, நகுல்யாவின் பேச்சில் லயித்து,தங்களையே மறந்திருந்த
நடுவர்களை லேசாக அசைத்தது.அடுத்த கணமே அவர்களின்
பேனாக்கள் நடமாட ஆரம்பித்தன -இறுதி போட்டிக்கான
மார்க் பட்டியலில்!